

உலக அளவில் வளமும் செழிப்பும் அதிகரித்து வருகின்றது என லெகாடம் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இது வெளியிட்ட உலகச் செல்வவளக் குறியீட்டெண் பட்டியல்படி வளம் கொழித்த நாடுகள் பட்டியலில் 5 வது ஆண்டாக நார்வே முதலிடம் பெற்றுள்ளது.
இரண்டாமிடத்தில் சுவிட்சர்லாந்து, 3ம் இடத்தில் கனடா, 4-ம் இடத்தில் சுவீடன், 5ம் இடத்தில் நியூசிலாந்து, 6ம் இடத்தில் டென்மார்க் இடம்பெற்றுள்ளன.
பொருளாதாரச் சரிவு காரணமாக அமெரிக்கா 11வது இடத்துக்கும் பிரிட்டன் 16வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன. லண்டனைச் சேர்ந்த லெகாடம் ஆய்வு நிறுவனம் 7-ம் ஆண்டாக இந்தக் குறியீட்டெண் விவரத்தை வெளியிட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய எட்டு பிரிவுகளின் கீழான செயல்பாட்டை கருத்தில் கொண்டு 142 நாடுகளின் வளத்தை தர வரிசைப் படுத்துகிறது இந்த குறியீட்டெண்.
தொழில்முனைவு ஆற்றல், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் கடந்த 5 ஆண்டுகளாக உலக நாடுகள் பல செழிப்பு கண்டு வருகின்றன.
ஆசியா
பல்வேறு துறைகளில் தொய்வடைந்து 106வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்தியா. கடந்த ஆண்டில் 101வது இடத்தில் இருந்தது. பாதுகாப்பான சூழல் இல்லாததே இதற்கு காரணம் என்று தெரிகிறது.
வங்கதேசம் முதல்தடவையாக 103வது இடத்தைப் பிடித்து இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. பாதுகாப்பு சார்ந்த சவால்களால் முன்னேற்றம் காணமுடியாமல் பாகிஸ்தான் 132வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் சீனா 51வது இடம், தாய்லாந்து 53வது இடம், மலேசியா 44வது இடத்தைப் பிடித்துள்ளன.
ஐரோப்பா
2009ம் ஆண்டிலிருந்து வளம் பெற்று வரும் ஐரோப்பிய நாடுகளில் அதிக வளர்ச்சி பெற்ற நாடாக ஜெர்மனி திகழ்ந்து 14வது இடத்தில் உள்ளது. அது பிரிட்டனை 16வது இடத்துக்குத் தள்ளிவிட்டது.
முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளான ஸ்லோவேனியா 24வது, செக் குடியரசு 29வது எஸ்தோனியா 36வது, ஸ்லோவாகியா 38 வது இடத்தில் உள்ளன.
லெகாடம் வளக் குறியீடு மதிப்பிடல் தொடங்கியதிலிருந்து ஆய்வு செய்தால் பல்வேறு நாடுகள் தொடர்ந்து செல்வத்திலும் மக்களின் நலத்தைப் பேணுவதிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவருவது வெளிப்படையாகத் தெரிகிறது என்றார் லெகாடம் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜெப்ரி ஜெட்மின்.
அதே வேளையில் போர், ஆட்சி நிர்வாகம், தனி மனிதச் சுதந்திரம் போன்ற சார்ந்த பிரச்சினைகள் மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை நிலைகுலையச்செய்கின்றன. எனவே, உலக நிலவரம் திருப்தி தான் என்று இருந்துவிட முடியாது. அண்மை காலங்களில் அமெரிக்கா, பிரிட்டனின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இல்லை என்றார் ஜெப்ரி.