

உக்ரைனில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. தலைநகர் கீவில் அதிரடிப் போலீஸார் முகாமிட்டிருந்த அரசு அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.
உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகள் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக அந்த நாட்டில் சில மாதங்களாக உள்நாட்டுக் குழப்பம் நீடித்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் சார்பில் தலைநகர் கீவில் நாள்தோறும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகின்றது.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அதிரடிப் படை போலீஸார் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கீவின் பிரதான பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர். அந்தக் கட்டிடத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதிரடிப்படை போலீஸாரை விரட்டியடித்துவிட்டு அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதனிடையே நாட்டில் அமைதியை ஏற்படுத்த அரசுத் தரப்புக்கும் போராட்டக் குழுக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் யாட்சென்யுக்குக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க அதிபர் விக்டர் யானுகோவிச் முன்வந்தார்.
இதனை ஏற்க மறுத்துவிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டத்தை மீண்டும் தீவிரப் படுத்தியுள்ளனர்.