Last Updated : 09 Jun, 2016 10:32 AM

 

Published : 09 Jun 2016 10:32 AM
Last Updated : 09 Jun 2016 10:32 AM

பதற்றத்தில் ஆழ்த்திய பனாமா - 3

வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை பனாமாவுக்கு உண்டு. அங்கு சூரிய உதயத்தை பசிபிக் கடலில் பார்த்துவிட்டு, சூரிய அஸ்தமனத்தை அட்லாண்டிக் பெருங் கடலில் பார்க்கலாம். ஒரே நாளில் இந்த இரு பெரும் கடல்களிலும் நீந்தலாம். கொலம்பியாவின் ஒரு பகுதியாக இருந்த பனாமாவின் மீது அமெரிக்காவின் பார்வை வெகு அழுத்தமாகப் பதிந்ததற்குக் காரணம் உண்டு. ஏன்? பார்ப்போம்.

இன்றைய தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியிலுள்ள நாடுகளும் மத்திய அமெரிக்காவின் தெற்குப் பகுதி நாடுகளும் இணைந்த கூட்டமைப்பாக மாறியது கிரான் கொலம்பியா. 1819-ல் இருந்து 1830 வரை இந்தக் கூட்டமைப்பு சிதறாமல் இருந்தது.

இன்றைய கொலம்பியா, பனாமா, வெனிசுலா, ஈக்வேடர், வடக்கு பெரு, மேற்கு கயானா, பொலிவியா, வடமேற்கு பிரேஸில் ஆகியவை இதில் அடங்கிய நாடுகள் (எனினும் ஈக்வேடார் மற்றும் வெனிசுலாவின் சில பகுதிகள் மீது ஸ்பெயின் ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருந்தது). 1830-ல் கொலம்பியா தன்னை மேற்படி கூட்டமைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டபோது அதன் ஒரு பகுதியானது பனாமா.

பனாமாவின் மீது அமெரிக்காவின் (யு.எஸ்.ஸின்) பார்வை அழுத்தமாகவே படிந்தது. சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து நியூ யார்கிற்கு ஏதாவது பொருளைக் கப்பலில் அனுப்ப வேண்டுமென்றால் தென் அமெரிக்காவை

வலம் வந்துதான் செல்ல வேண்டியிருக்கும். பனாமா பகுதிக்கு அருகே ஒரு கால்வாய் வெட்டப்பட்டால் இதன் மூலம் சுமார் 8000 மைல் கப்பல் பயணத்தைக் குறைக்க முடியும். நேரம், பணம் இரண்டுமே எக்கச்சக்கமாக மிச்சமாகும்.

‘இந்தப் பகுதியில் ஒரு கால்வாய் வெட்டப்பட்டால், அது பசிபிக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்குமே; இதனால் அற்புதமான கடல்வழி ஒன்று கிடைக்குமே’ என்பதால் பல வல்லரசுகளுக்கு இந்தப் பகுதியின் மீது ஒரு கண். பெரும்சக்தி கொண்டு அந்நாளில் விளங்கிய பிரிட்டன் இப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு கால்வாயையும் வெட்டிக் கொண்டு அது தனக்கே சொந்தம் என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கொலம்பியாவுக்குத் தோன்றியது. அதனால் 1846-ல் யு.எஸ்.ஸுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி பனாமா பகுதியில் நடைபெறும் அனைத்து வணிகத்துக்கும் யு.எஸ்.பாதுகாப்பு அளிக்கும்.

1850-ல் இந்த நிலப்பரப்பில் ஒரு ரயில் பாதையை நிறுவ கொலம்பியா ஒத்துக் கொண்டது. நியூயார்க் வணிகர்களுக்கு இந்தப் பாதை காலப்போக்கில் பெரும் லாபம் தரும் என்பதால் அவர்கள் எண்பது லட்சம் டாலர் செலவில் ரயில் பாதையை நிறுவினார்கள்.

இந்த ரயில் பாதை தொடர்பாக பனாமா குடியரசு அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தப் பாதை கட்டப்படவிருக்கும் பனாமா கால்வாய்க்கு இணைகோடுபோலச் செல்லும். அட்லாண்டிக் கடலையும், பசிபிக் கடலையும் (மத்திய அமெரிக்கப் பகுதியில்) இணைக்கும். இந்த ரயில் தடம் 76.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதை நிர்வாகிக்க ‘’பனாமா கால்வாய் ரயில்வே கம்பெனி’’ என்ற அமைப்பு ஒன்று உருவானது. பனாமா கால்வாய் சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு உருவானபோது அதற்கான கட்டுமானத்துக்கு இந்த ரயில்வே தடம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அமெரிக்கா இந்த ரயில் பாதை உருவாவதில் மிக அதிக ஆர்வம் காட்டியதற்கு வேறொரு குறிப்பிட்ட காரணம் உண்டு. கால்வாய்க்கான திட்டம் தீட்டி அது உருவாகப் பலப்பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்குள் 1849-ல் கலிஃபோர்னியாவில் தங்கம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட, தங்க வேட்டை நடத்துபவர்கள் மிக அதிகமானார்கள். அமெரிக்காவின் பிற பகுதிகளிலிருந்து அங்கு வணிகர்கள் குவிந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா போன்ற பல பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர்.

இது தொடர்பான சட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்படாததால், பலரும் தங்கச் சுரங்கங்களை வெட்டி உரிமை கோரலாம் என்ற நிலை தொடக்கத்தில் அதிகமாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து கலிஃபோர்னியாவுக்கான போக்குவரத்தும் அதன் வணிகமும் பெருகின. இந்த நிலையில் பனாமா பகுதியில் உருவான ரயில் தடம் அமெரிக்காவுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

அடுத்ததாக பனாமா கால்வாய் தொடர்பான விஷயங்களைக் கூறி முடித்து விட்டு பனாமாவில் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற அரசியல் சம்பவங்களுக்கு வருவோம்.

இப்போதைய பனாமா கால்வாய் இருப்பது வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் மிகச் சிறிய பகுதியில். இப்போது பனாமா தனிநாடு என்றாலும் ஒரு காலத்தில் தென் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா நாட்டின் வடபகுதியாகவே இருந்து வந்தது என்று அறிந்தோம். அப்போது இந்தப் பகுதியைக் கடக்க வேண்டுமானால் படகின் மூலம், பிறகு கழுதைகளின் துணையுடன், அதற்குப் பிறகு கால்நடையாக என்றுதான் பயணம் செய்ய வேண்டும்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x