Published : 13 Mar 2017 06:06 PM
Last Updated : 13 Mar 2017 06:06 PM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு நிறவெறியர்: வெள்ளை மாளிகை அதிகாரியிடம் இந்திய பெண் நேரடி குற்றச்சாட்டு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சீயன் ஸ்பைசர் ஷாப்பிங் செய்ய வந்திருந்தபோது, இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அதிபர் ட்ரம்பை இனவாதி என குற்றம்சாட்டி பேசிய வீடியோ காட்சிகள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

வாஷிங்டன் டி.சி.யில் வசித்து வருபவர் ஸ்ரீ சவுஹான் (33). இவர் இந்திய அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர். வாஷிங்டனில் உள்ள ஆப்பிள் மொபைல் கடைக்கு ஷாப்பிங் செய்ய வந்த சீயன் ஸ்பைசரை கண்டதும் அமெரிக்காவில் நடந்து வரும் நிறவெறி சம்பவங்கள் குறித்து திடீரென கேள்வி கேட்கத் தொடங்கினார். ‘‘நிறவெறியாளருடன் இணைந்து பணியாற்றுவதை எப்படி உணர்கிறீர்கள்?’’ என சவுஹான் கேட்டதும், சீயன் ஸ்பைசர் தர்மசங்கடத்தில் நெளிந்தார். எனினும் அசாதாரணமான சூழலை தவிர்க்கும் வகையில், ‘‘நாம் சிறந்த நாட்டை கொண்டுள்ளோம்’’ என பதில் அளித்தார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சவுஹான், ‘‘நாம் சிறந்த நாட்டை கொண்டுள்ளோமா? ரஷ்ய உளவாளிகளுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்களா. நீங்களும் கிரிமினல் தானா? அதிபர் ட்ரம்பை போல் நீங்களும் தேசத்துக்கு துரோகம் இழைக்கிறீர்களா. ரஷ்யாவைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?’’ என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்தார்.

அதே சமயம் நிதானத்தை கைவிடாமல் புன்னகைத்த ஸ்பைசர், ‘‘இந்த நாடு சிறந்த நாடாக இருப்பதால் தான், உங்களால் இங்கு வாழ முடிகிறது’’ என பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

அமெரிக்காவில் பிறந்த சவுஹான், இது இன/நிற மேட்டிமைவாதமே என தெரிவித்துள்ளார். தான் அமெரிக்காவில் வாழ்வதற்கு உரிமை இல்லாதவள் என்பது போல் ஸ்பைசர் பதில் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார். தேர்தல் முடிந்த நாள் முதல் தினசரி அச்சத்துடனே விடியலை சந்திப்பதாகவும் இந்தியர்களுக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதை உலகமே அறியும் என்றும் சவுஹான் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘நான் குடியேற்றவாசிகளின் மகள். அமெரிக்கா நல்ல நாடு என்பதால் தான் எனது பெற்றோர்கள் இங்கு குடியேறினர். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. அமெரிக்க மக்கள் சார்பில், அவர்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை காணவே ஸ்பைசரிடம் பேசினேன். இதற்காக நான் வருத்தப்பட போவதில்லை’’ என்றார்.

ஸ்பைசருடன் பேசிய விவகாரத்தை தனது மொபைலில் படம்பிடித்து அதை ட்விட்டரிலும் அவர் பதவியேற்றியுள்ளார். அமெரிக்காவின் உயர் பதவியில் இருக்கும் ஸ்பைசரிடம் இந்தியரான சவுஹான் இவ்வாறு கேள்விகளை கேட்டதும் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x