

பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பரவியிருப்பதற்கு தன்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன என அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஐஎஸ் இயக்கம் வேகமாகப் பரவுவது குறித்து, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க பிரதமர் நவாஸ் ஷெரீப் சார்க் மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அமைப்பு குறித்த தகவலைப் பகிர்ந்து கொள்ள சர்வதேச அளவிலான அமைப்பை உருவாக்க அவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
ஐஎஸ் அமைப்பு, பாகிஸ்தான் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதற்கு என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அந்த அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக, ஏதேனும் ஒரு தலிபான் தலைவர் விரைவில் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.தலிபான்களைப் போல, ஐ.எஸ்.அமைப்பும் பாகிஸ்தானில் பரவி மேலுமொரு பயங்கரவாத அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்வதற்கு முன்பாக, பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் ஐஎஸ் கொடிகள், பதாகைகள் காணப்படுவதாக தகவல் வந்துள்ளது.பயங்கரவாதிகளின் தாக்குதலால் நாடு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பாதுகாப்புப் படையினரை இழந்துள்ளது. எனவே, பாகிஸ்தானில் ஐஎஸ் அமைப்பு இல்லை என தொடர்ந்து மறுத்து வருவதற்குப் பதிலாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருப்பதாக, பாகிஸ்தானில் டான ்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.