ஜி 20 மாநாட்டை முன்னிட்டு பிரிஸ்பேனில் பலத்த பாதுகாப்பு

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு பிரிஸ்பேனில் பலத்த பாதுகாப்பு
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 அமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய மற்றும் சீன அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த காலங்களில் இம்மாநாடுகள் நடைபெற்ற இடத்தில் முதலாளித்துவத்துக்கு எதிரான பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக கடந்த 2006-ம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டின்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது தவிர, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த ஆஸ்திரேலிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரிஸ்பேனில் மாநாடு நடைபெறும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் யாராவது சுற்றித்திரிந்தால், அவரின் ஆடைகளை களைந்து சோதனை செய்வதற்கு போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

பிரிஸ்பேன் பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்துக்குச் செல்வதற்கான சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in