

கம்போடியாவில் கூலி உயர்வு கேட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆடை உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.
கேப், நைக் மற்றும் எச் அன்ட் எம் உள்ளிட்ட முன்னணி பிராண்ட் ஆடைகளை உற்பத்தி செய்யும் கம்போடியாவின் ஆடை உற்பத்தித் துறை பல ஆயிரம் கோடி வர்த்தக மதிப்பு கொண்டது. 6.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் இந்தத் துறை நாட்டின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்குகிறது. அங்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி தொழிலாளர்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, குறைந்தபட்ச மாதாந்திர ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் நாம்பென்னில் உள்ள வெங் ஸ்ரெங் தொழிற்சாலை பகுதியில் வெள்ளிக்கிழமை திரண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் கலைந்து செல்லுமாறு அவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால், போராட்டத்தைக் கைவிட மறுத்த அவர்கள், தங்கள் கையில் கம்புகள், கற்கள் மற்றும் பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு போலீஸார் மீது வீசினர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரிக்கும் வகையில் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோதும்,அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டதாக நாம்பென் நகர காவல் துறை துணை ஆணையர் சுவான் நரின் தெரிவித்தார்.
ஆடை நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துவரும் பிரதமர் ஹுன் சென் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து,எதிர்க்கட்சித் தலைவர் சாம் ரெய்ன்சி கூறுகையில், "தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்குவதை ஏற்கமுடியாது. பிரதமர் ஹுன் சென் பதவி விலகி புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்" என்றார். இந்த சம்பவத்தைநேரில் பார்த்த மனித உரிமை ஆர்வலர் சான் சோவெத் கூறுகையில், "ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்" என்றார்.