

எரிசக்தித் துறை விலை நிர்ணயத்தை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கும் ஒரு பகுதியாக வாகன எரிபொருள் விலையை மெக்சிகோ அரசு 20% உயர்த்தியதையடுத்து ஆங்காங்கே பயங்கர கலவரம் வெடித்து, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு பல வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டன.
இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவின் ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நெருக்குதலுக்கேற்ப கேசோலின் மானியங்களைக் குறைத்து விலைகளை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் கட்டுப்பாட்டுத் தளர்வு நடைமுறையை மெக்சிகோவும் கடைபிடித்தது.
இதனையடுத்து கடந்த வார இறுதியில் கேசோலின் விலை 20% அதிகரிக்கப்பட்டது, இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த ஆங்காங்கே பயங்கர கலவரம்
வெடித்தது, 300க்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரங்களுக்கு 4 பேர் பலியாக, சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை, துறைமுகம் ஆகியவை முழுதும் செயலற்று போனதற்குக் காரணம் மக்கள் கடும் ஆவேசத்துடன் மறியலில் ஈடுபட்டுள்ளதே.
மக்களின் கோபத்தை அங்கீகரித்த அதிபர் என்ரிக் பெனா நியட்டோ, “சர்வதேச விலைகளுக்கு ஏற்ப கேசோலின் விலையை அதிகரிப்பது கடினமான முடிவுதான். ஆனால் ஒரு அதிபராக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். ஏனெனில் எதிர்காலத்தில் இதைவிட மோசமான விளைவுகள் ஏற்படாமல் தடுக்கவே. எரிவாயு விலையை செயற்கையாக குறைவாக வைத்திருப்பது ஏழை மெக்சிகர்களிடமிருந்து பணத்தை பறித்து அதிகம் பணம் உள்ளவர்களிடம் கொடுப்பதற்குச் சமமாகும்” என்று இவரும் தொலைக்காட்சி உரையில் ‘ஏழை நலன்’ என்ற பிரச்சாரத்தை பயன்படுத்தினார்.
மேலும் மெக்சிகோவுக்கான 2017-ம் ஆண்டு சவால் என்னவென்பதை குறிப்பிட்ட அதிபர் நியட்டோ, “புதிய அமெரிக்க ஆட்சியினிடத்தில் உடன்பாடான உறவுகளை கட்டமைத்தலாகும். இதனை மெக்சிகோவின் உடைக்க முடியாத கவுரவத்தை காப்பாற்றுவதுடன் சேர்த்து செய்ய வேண்டிய தேவை உள்ளது” என்றார்.
ஆங்காங்கே மக்கள் போராட்டத்தினால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மெக்சிகோ நகரமே போர்க்களமாக காட்சியளிக்கிறது. லாரி மற்றும் கார் ஓட்டுநர்கள் இந்த 20% எரிபொருள் விலை உயர்வினால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.