

சிரிய உள்நாட்டு போரினால் தனக்கு நேர்ந்த நிலையை தனது வெற்று பார்வையால் ஒம்ரான் உலகிற்கு உணர்த்தினான். ஆனால், ஒம்ரானை போன்றே ஆயிரக்கணக்கான குழந்தைகள் சிரியாவில் தினந்தோறும் நடக்கும் வெடிகுண்டுகளின் பெரும் வலிக்கு அச்சுறுத்தப்படுகின்றனர்.
முன்னதாக ஓமரான் தாக்னிஷ் என்ற 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டான். ரத்தம் தோய்ந்த நிலையில் உடல் முழுவதும் தூசி படிந்து திகைப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவனின் வீடியோ, புகைப்படத்தை ‘வொயிட் ஹெல்மெட்’ அமைப்பினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒம்ரான்
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்து சிரியாவின் அலெப்போ பகுதியின் குழந்தை நல மருத்துவர் அபு அல் பரா கூறும்போது, “சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்கும் உள் நாட்டு போரில் ஒம்ரானை போன்றே பல குழந்தைகள் இதே போன்ற தாக்குதலுக்கு உள்ளாகுகின்றனர். சில குழந்தைகளின் காயங்களின் வலிகளை புகைப்படங்களால் கூட கூற முடியாது. உலக நாடுகளின் கண்ணீரோ, கண்டனங்களோ சிரியாவின் நிலையை மாற்ற போவதில்லை.” என்கிறார்.
பல பரிமாணங்களில் வலம் வரும் ஒம்ரானின் புகைப்படங்கள்:
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் உரையாடி கொண்டிருக்கும் போது நடுவில் ஒம்ரான் அமர்திருப்பது போன்ற படம் சமூக வலைதலங்களில் உலா வருகிறது.
சூடானை சேர்ந்த கார்டூனிஸ்ட் காலித் அல்பை. சென்ற வருடம் துருக்கியில் கரை ஒதுங்கிய அய்லானுக்கு அருகில் ஒம்ரான் அமர்திருப்பது போன்ற படத்தை வரைந்து தனது வலைப்பக்கத்தில் பதிந்துள்ளார்.
சிரியாவில் நடைபெறும் உள் நாட்டு போருக்கு இதுவரை 2,50000 மக்கள் பலியானதாகவும் அதில் 15,000 பேர் குழந்தைகள் எனவும், 2011 ஆம் முதல் அங்குள்ள குழந்தைகள் போர் சூழலைதான் அனுபவித்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.