

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் பார்க் குவென் ஹை விரைவில் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தென்கொரிய சிறப்பு விசாரணை முகமை வெளியிட்ட அறிக்கையில், தென்கொரியாவின் சிறப்பு விசாரணை முகமை தலைமையகத்தில் பார்க்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கும் வகையில் ஏராளமான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தனக்கெதிரான ஆதாரங்களை அழிக்க பார்க் முயற்சி செய்து வருகிறார்; எனவே விரைவில் அவரை கைது செய்ய தலைமை நீதிமன்றத்திடமிருந்து உத்தரவைப் பெற இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறப்பு விசாரணை முகமையிடம் தனக்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பார்க் ஹை குவென் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
முன்னதாக, பார்க் குவென் ஹை மற்றும் அவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில் ஆகியோர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து தென் கொரிய நாடாளுமன்றம், அதிபர் பார்க்கை பதவி நீக்கம் செய்தது. இதை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி உறுதி செய்தது.
தென் கொரிய அதிபராக இருந்த பார்க் குவென் ஹை பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தல் மே 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.