Published : 03 Mar 2017 10:05 AM
Last Updated : 03 Mar 2017 10:05 AM

உலக மசாலா: சிறுநீரகத்தைத் திருட ஆரம்பிச்சிட்டீங்களா?

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 25 வயது ஸ்ரீ ராபிதா, 2014-ம் ஆண்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் கத்தார் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். “என்னை அபுதாபியில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகச் சொன்னார்கள். ஆனால் நான் கத்தாரில் உள்ள பாலஸ்தீனர் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். முதல் வேலையாக என்னை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர். நான் ஆரோக்கியமாக இருக்கிறேனா என்று பார்ப்பதற்கு அழைத்துச் சென்றதாகக் கூறினார்கள். மூன்றாவது நாள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். காரணம் கேட்டபோது, உடல்நிலை பலவீனமாக இருப்பதால் ஒரு ஊசி போடுகிறேன் என்றார் மருத்துவர். நான் மறுப்பதற்குள் ஊசியைப் போட்டுவிட்டார். அது அனஸ்தீசியா என்று பிறகுதான் தெரிந்தது. அரை மயக்கத்தில் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துவரப்பட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்தபோது பின்பகுதியில் வலியும் தையலும் இருந்தன. சிறுநீர் கழித்தபோது ரத்தமும் கலந்துவந்தது. மருத்துவரிடம் காரணம் கேட்டேன். பதில் சொல்லவில்லை. சில நாட்களில் நான் ஆரோக்கியமாக இல்லை என்று புகார் கொடுத்து, மீண்டும் ஏஜென்சிக்கே அனுப்பி வைத்துவிட்டனர். அடிக்கடி உடல் நிலை மோசமானதால், என்னை ஏஜென்சி ஊருக்கே அனுப்பி வைத்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக வலியால் துடித்துவருகிறேன். சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான், என்னுடைய சிறுநீரகம் திருடப்பட்ட விஷயமே தெரிந்தது. வலது சிறுநீரகத்தை எடுத்துவிட்டு, ஏதோ ஒரு பொருளை வைத்துவிட்டார்கள். அதனால்தான் எனக்கு வலி இருந்துகொண்டே இருக்கிறது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். என் சிறுநீரகத்தைத் திருடியவர்கள் மீது இந்தோனேஷிய அரசாங்கம் வழக்கு தொடுக்க வேண்டும்” என்கிறார்  ராபிதா.

அடப்பாவிகளா, பிழைப்புத் தேடி வருகிறவர்களிடம் சிறுநீரகத்தைத் திருட ஆரம்பிச்சிட்டீங்களா?

ஜப்பானில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துவிட்டது. இந்த ரோபோ தன்னை எதிர்த்து விளையாடுபவருக்கு உத்திகளைச் சொல்லிக் கொடுத்து, அவரை மிகச் சிறந்த விளையாட்டு வீரராக மாற்றுகிறது. மனிதர்களைப்போல ரோபோ பயிற்சியாளர் களைப்படைவதில்லை, கோபப்படுவதில்லை. இதனால் பயிற்சி பெறுபவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. மூன்றாண்டு உழைப்பின் பலனாக, 90% துல்லியத்துடன் ஒரு ரோபோ பயிற்சியாளரை உருவாக்கியிருக்கிறார்கள். புதியவர்களுடன் மெதுவாகவும் அனுபவம் பெற்ற வீரர்களுடன் வேகமாகவும் விளையாடுகிறது இந்த ரோபோ. பயிற்சி பெறுபவர் சிறப்பாக விளையாடினால், அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ரோபோ திரையில் ’அபாரம்’, ‘அற்புதமான பந்து வீச்சு’ என்றெல்லாம் வாசகங்கள் தோன்றுகின்றன. தவறாக விளையாடும்போது, தவறு என்ன என்பதையும் அதை எப்படிச் சரி செய்திருக்க வேண்டும் என்பதையும் ரோபோ சொல்லிக் கொடுக்கும்.

அட, கின்னஸில் இடம்பெற்ற ரோபோ பயிற்சியாளர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x