

தென்கொரியாவில் பார்க் குவென் ஹைனை அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.
ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக பதவி பறிக்கப்பட்ட பார்க் குவென் ஹையின் ஆதரவாளர்கள் 2000க்கும் மேற்பட்டோர் தென்கொரிய தலைநகர் சியோலில் இன்று (சனிக்கிழமை) பேரணி நடத்தினர்.
பேரணி சென்றவர்கள் பார்க் குவென் ஹைக்கு ஆதரவாக எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் தென்கொரியாவின் தேசியக்கொடியை ஏந்திச் சென்றனர். மேலும் பார்க் குவென் ஹை நிரபராதி என்று அவர் மீண்டும் அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டுச் சென்றனர்.
பார்க் குவென் ஹை மற்றும் அவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில் ஆகியோர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து தென் கொரிய நாடாளுமன்றம், அதிபர் பார்க்கை பதவி நீக்கம் செய்தது. இதை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி உறுதி செய்தது. இதனால் அடுத்த அதிபரை 2 மாதங்களுக்குள் தேர்வு செய்வது கட்டாயம் ஆகும்.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து பார்க் குவென் ஹை கூறும்போது 'உண்மை விரைவில் வெளியே வரும்' என்றார்.
தென் கொரிய அதிபராக இருந்த பார்க் குவென் ஹை பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தல் மே 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிதவாத எதிர்க்கட்சித் தலைவரும் பார்க்கிடம் கடந்த 2012-ல் தோல்வி அடைந்தவருமான மூன் ஜே-இன் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.