Published : 02 Dec 2013 10:35 AM
Last Updated : 02 Dec 2013 10:35 AM

தாய்லாந்தில் கலவரம்: பிரதமர் இங்லக் ஷினவத்ரா எங்கே?

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பிரதமர் இங்லக் ஷினவத்ரா தலைமை யிலான அரசில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டி ஜனநாயகக் கட்சி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்தப் போராட்டம் கலவரமாக வெடித்துள்ளது. தலைநகர் பாங்காக்கில் அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ள எதிர்க்கட்சியினரை ராணுவ உதவியுடன் போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. ஞாயிற்றுக்கிழமை 8-வது நாளாக நீடித்த போராட்டத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்ற னர். அவர்கள் பாங்காக் போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

தாய்லாந்தின் முக்கிய தொலைக்காட்சி ஊடகமான தாய் பிபிஎஸ் அலுவலகத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். பாங்காக்கில் உள்ள போலீஸ் மைதானத்தையும் ஆர்ப்பாட்டக்

காரர்கள் கைப்பற்றினர். தலைநகரின் பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

முன்னேற்பாடாக பாதுகாப்பு கவச முகமூடியுடன் வந்திருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் பதிலுக்கு கண்ணீர் புகைக் குண்டு களையும் தீயணைப்பு கருவிகள் மூலம் ரசாயன புகையையும் பரப்பி போலீஸாரை விரட்டினர். பிரதமர் இங்லக் ஷினவத்ரா அலுவலகம் அமைந்துள்ள அரசு அலுவலக கட்டடத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர்.

பாங்காக் ராம்காம்ரயாங் பல்கலைக்கழகத்தில் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தின்போது சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவித்தனர். அவர்களை ஞாயிற்றுக்கிழமை காலை போலீஸார் மீட்டனர்.

வெளிநாட்டில் பிரதமர்?

எதிர்க்கட்சிகள் தங்களின் போராட்டத்துக்கு “மக்கள் புரட்சியால் ஆட்சிக் கவிழ்ப்பு” என்று பெயரிட்டுள்ளனர். அதன்படி, டிசம்பர் 1-ம் தேதிக்குள் பிரதமர் இங்லக் ஷினவத்ரா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது.

இதனால் தலைநகர் பாங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. போராட்டங்கள் தீவிரமாகி இருப்பதால் பிரதமர் இங்லக் ஷினவத்ரா வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்பது பரம ரகசியமாக உள்ளது.

கைது வாரன்ட்

அரசுக்கு எதிரான போராட்டங்களை ஜனநாயகக் கட்சி பொதுச் செயலர் சுதேப் தவுக்சுபன் முன்னின்று நடத்தி வருகிறார். அவரைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே அரசு ஆதரவாளர்கள் சுமார் 70,000 பேர் பாங்காக்கில் சனிக்கிழமை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினர். சிவப்பு நிற உடையணிந்த அவர்கள் ஞாயிற்றுக் கிழமையும் முக்கிய இடங்களில் கூடி அரசுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதனால், தாய் பிய் கட்சித் தொண்டர்களுக்கும் ஜனநாயகக் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x