

இந்தியாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார் பாகிஸ்தானின் புதிய ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப்.
எல்லைப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவ அதி காரிகள், வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார். சமீப காலமாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதியின் இந்த நடவடிக்கை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் 5 இந்திய வீரர்களைக் கொன்றனர். இதையடுத்து எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியப் பகுதியை நோக்கி முக்கியமாக காஷ்மீர் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசுவது, பீரங்கியால் சுடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் பாதுகாப்புப் பணியில் உள்ள இந்திய ராணுவத்தினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினரை அட்டூழியம் செய்து வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் இருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது.
எனினும் இந்திய ராணுவத்தினர்தான் தங்கள் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.