

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் தங்களின் மதச் சம்பிரதாயப்படி நீண்ட தலைமுடி, தாடி வளர்ப்பது, பச்சை குத்துதல் (டாட்டூ) ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சீக்கியர்கள் தங்களது மத வழக்கப்படி தலையில் டர்பன் அணியவும் தாடி வளர்க்கவும் நீண்ட காலமாக அனுமதி கோரி வந்தனர். இதேபோல் பல்வேறு மதங்களைச் சேர்ந்த வீரர்களும் தங்களின் மத வழக்கப்படி உடலில் பச்சை குத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினர்.
இவற்றை பரிசீலித்த அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்கடன், கடந்த புதன்கிழமை புதிய கொள்கையை வெளியிட்டது. இதுகுறித்து லெப்டினென்ட் கமாண்டர் நாட்டே கிறிஸ்டின்சென் நிருபர்களிடம் கூறியதாவது:
பல்வேறு மதங்களின் வழக்கப்படி சில வீரர்களுக்கு விதிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் வீரர்கள் ஹெல்மெட் அணியும்போதோ, விமானப் பயண உடை அணியும்போதே பாதிப்பை ஏற்படுத்தினால். அந்த நடைமுறைகளுக்கு நிச்சயமாக அனுமதி அளிக்கப்படாது என்று தெரிவித்தார்.