குடியேற்ற நடைமுறைகளில் சீர்திருத்தம் தேவை : பராக் ஒபாமா

குடியேற்ற நடைமுறைகளில் சீர்திருத்தம் தேவை : பராக் ஒபாமா
Updated on
1 min read

குடியேற்ற நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

சிலிக்கான் வேலியில் தற்போது சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்திய வம்சாவளி பெண் தொழிலதிபர் கீதா வல்லபனேனி, கிரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை அனுமதி பெற 12 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலைமையை மனதில் வைத்து இந்த யோசனையை ஒபாமா முன்வைத்தார்.

சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசினார். அமெரிக்க கனவுடன் இந்தியாவில் படித்து தொழில்முனைவோராக மாறிய கீதா வல்லபனேனி, 15 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒபாமாவிடம் அறிமுகம் செய்து வைக்கப்படும் சிறப்பு கௌரவம் கீதாவுக்கு கிடைத்தது.

12 ஆண்டு காலம் காத்திருந்த பிறகே அவருக்கு நிரந்தர குடியுரிமை அந்தஸ்து (கிரீன் கார்டு) கிடைத்தது. கிரீன் கார்டு கிடைத்த அடுத்த 10 மாதங்களில் சிலிகான் வேலியில் லுமிநிக்ஸ் என்கிற சாப்ட்வேர் நிறுவனத்தை அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, அமெரிக்க தொழிலதிபர்கள், படிப்பிலும் தொழிலிலும் கெட்டிக்காரர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து உயர் கல்விக்கு வழிசெய்து தருகிறார்கள், பின்னர் அவர்களை சொந்த இடத்துக்கு அனுப்பி விடுகிறார்கள். அவர்கள் வேறு ஏதோ இடத்தில் தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு கிடைக்க வழிசெய்து விடுகிறோம்.

தங்களைவிட்டு பிரிந்து நிரந்தர குடியுரிமை பெற தாமதம் ஏற்படுவதால் நீண்ட காலம் காத்திருக்கும் இளைஞர்களை அமெரிக்காவில் அவர்களுடனே வந்திணைய வேண்டும் என குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்க கனவுடன் வரும் இளைஞர்களின் விருப்பம் நன்கு படித்து, தான் நேசிக்கும் அமெரிக்காவுக்கு சேவை ஆற்றுவதும் நல்ல பங்களிப்பை தருவதும்தான். எனவே குடியேற்ற நடைமுறையில் விரிவான சீர்திருத்தம் கொண்டு வரப்படவேண்டும். அமெரிக்காவின் சட்டபூர்வ குடியேற்ற நடைமுறையை நவீனப்படுத்தி, குடும்ப விசா கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலமாக காத்திருப்போருக்கு தீர்வு தரும் வகையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படவேண்டும். இதற்கான முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கவேண்டும் என்றார் ஒபாமா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in