Published : 19 Jun 2016 09:58 AM
Last Updated : 19 Jun 2016 09:58 AM

உலக மசாலா: பாலினச் சமத்துவக் கழிப்பறையை வரவேற்கலாம்!

மெரிக்காவைச் சேர்ந்த செல்சி ஹில்லுக்கு 3 வயதிலிருந்தே நடனம் மீது ஆர்வம். 5 வயது முதல் நடனத்தை முறையாகக் கற்றுக்கொண்டார். பள்ளிகளிலும் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளையும் குவித்து வந்தார். ஒரு குடிகார கார் ஓட்டுநரால், 17 வயதில் கோர விபத்தைச் சந்தித்தார் செல்சி. அவரது உடலின் கீழ்ப் பகுதி முடங்கிப் போனது. இனி அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ‘’அந்தச் செய்தி என் பெற்றோரைக் கலங்க வைத்தது. உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்பதால் நான் சிறிதும் கவலைப்படவில்லை. நடக்க முடியாவிட்டால் நடனமாடிக்கொள்கிறேன் என்றேன். எல்லோருக்கும் ஆச்சரியம். நடனமாட கால்கள் வேண்டாம். சக்கர நாற்காலியின் மூலம் நடனமாட முடியும் என்று நம்பினேன். நான் குணமாவதற்கே அதிகக் காலம் தேவைப்பட்டது. சக்கர நாற்காலி நடனப் பெண்கள் குறித்த வீடியோக்களை தேடிப் பார்த்தேன். என்னுடைய கனவு நிஜமாகும் என்ற நம்பிக்கை வந்தது. 9 மாதங்களுக்குப் பிறகு ஆடி ஏஞ்சல் என்ற நடனப் பெண்மணியைச் சந்தித்தேன். அவர் குழுவினர் 20 ஆண்டுகளாகச் சக்கர நாற்காலிகள் மூலம் நடனமாடி வருவதை அறிந்துகொண்டேன். அவர்கள் உதவி செய்ய முன்வந்தனர். சக்கர நாற்காலி மூலம் ஹிப் ஹாப் நடனம் கற்றுக்கொண்டேன். 2012-ம் ஆண்டு என் முதல் சக்கர நாற்காலி நடன நிகழ்ச்சி அரங்கேறியது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதகங்களை எடுத்துச் சொல்வதாக நடனம் அமைந்தது. நான் வெளியுலகத்தில் நன்கு அறியப்பட்டேன். என்னைப் போன்று சக்கர நாற்காலி பயன்படுத்தும் பெண்கள், நடனமாட விரும்புவதாகக் கூறினார்கள். உடலின் மேல் பாகம் இயங்குபவர்களுக்கு ஹிப் ஹாப் நடனம் சிறப்பாக வரும். நடன வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். நடனமாட கால்கள் அவசியமில்லை, நம்பிக்கையான மனம் இருந்தால் போதும். நடனம் மூலம் என் உடல் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தொடர்ச்சியாக ஜிம்முக்குச் செல்கிறேன். உடலின் கீழ்ப் பகுதியை இயங்க வைக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். என்றாவது ஒருநாள் நான் மீண்டும் எழுந்து நிற்பேன் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கைதான் பல இடங்களிலும் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுக்க என்னை உந்திச் செல்கிறது’’ என்கிறார் செல்சி.

கால்கள் இன்றி நடனமாடும் செல்சிக்கு ஒரு பூங்கொத்து!

இங்கிலாந்தைச் சேர்ந்த 49 வயது கார்ல் டேவிஸ், ஹாங்காங்கில் வசித்து வருகிறார். வீட்டுக்குச் செல்லும் வழியில் திடீரென்று ஒரு மலைப்பாம்பு, அவரது காலை கடித்து கவ்விக் கொண்டது. ’’என்னென்னவோ செய்து பார்த்தேன். அது விடுவதாக இல்லை. அருகில் இருந்த ஒருவர் கற்களை எடுத்து பைதான் மீது வீசச் சொன்னார். என்னால் சரியாக வீச முடியவில்லை. என் கைகளால் மலைப்பாம்பின் பற்களை எடுத்தேன். அது வேகமாகச் சென்றுவிட்டது. மருத்துவமனையில் ஒருநாள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். அந்த வழியே செல்லும் மனிதர்கள், நாய்களை மலைப்பாம்பு தொடர்ந்து கடித்து வருவது தெரிந்தது. அதைப் பிடிக்க முடிவு செய்தேன். இரண்டாவது நாள் பாம்பு பிடிப்பவரை அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்குச் சென்றேன். எங்களை ஏமாற்றாமல் அது வந்து சேர்ந்தது. சட்டென்று பிடித்து, ஒரு பெட்டியில் அடைத்தோம். விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்தோம். 14 அடி நீளமும் 23 கிலோ எடையும் இருந்தது’’ என்கிறார் கார்ல் டேவிஸ்.

மலைப்பாம்பை பிடித்த பலே ஆசாமி!

சீனாவில் பாலினச் சமத்துவக் கழிப்பறைகள் வந்துவிட்டன. கஃபே, மால், பார் போன்ற இடங்களில் அனைத்துப் பாலினங்களுக்கும் பொதுவான கழிப்பறைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆண் படம், பெண் படம், பாதி ஆண், பாதி பெண் படம் சேர்த்து இதற்குச் சின்னமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கழிப்பறைகள் மூலம் பெண் குழந்தைகளை அழைத்து வரும் தந்தைகளுக்கும் உதவியாக இருக்கும். ஆண் குழந்தைகளை அழைத்து வரும் அம்மாக்களுக்கும் உதவியாக இருக்கும். வயதானவர்களை அழைத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும். திருநங்கைகளுக்கும் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படாது என்கிறார் ஐக்கிய நாடுகள் சபை அபிவிருத்தி திட்டத்துக்கான சீன அதிகாரி.

பாலினச் சமத்துவக் கழிப்பறையை வரவேற்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x