

ரஷியாவின் வோல்கோகிராட் நகரில் இன்று பேருந்து ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகினர்.
இந்தக் குண்டுவெடிப்பில் மேலும் 10 பேர் காயமடைந்ததாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதே நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலுக்கும், இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ரஷியாவின் தெற்குப் பகுதியான வோல்கோகிராட் நகரின் ரயில் நிலையத்தில் நேற்று நிகழ்த்தப்பட்ட பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானதும், இதே நகரில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி பேருந்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், வடக்கு காகசஸ் முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தக் கோரி அங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.