Published : 25 Feb 2017 10:01 AM
Last Updated : 25 Feb 2017 10:01 AM

உலக மசாலா: இதெல்லாம் ரொம்பவே அநியாயம்

உலகிலேயே முதல்முறையாகப் பூனைகளுக்கான 5 நட்சத்திர விடுதி ஒன்று மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த கேட்ஜோனியாவில் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கும் அறைகள், பெரிய படுக்கைகள், விளையாடும் இடம், மிகச் சிறந்த பராமரிப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. “வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேவிதமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதை ஆரம்பித்திருக்கிறோம். 35 அறைகள் இருக்கின்றன. சில அறைகளில் உரிமையாளர்களும் தங்கிக் கொள்ளலாம். சில நாட்கள் பூனைகளை விட்டுவிட்டுச் செல்லலாம். பூனைகளுக்கு மசாஜ், குளியல், ஆரோக்கியமான உணவு, விளையாட்டு, சரியான ஓய்வு என்று கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறோம். எங்களிடம் பல கட்டணங்களில் அறைகள் இருக்கின்றன. 3 மணி நேரங்களிலிருந்து 1 வருடம் வரை இங்கே பூனைகளை விடலாம். ஒரு இரவுக்கு 400 ரூபாயிலிருந்து அறைகள் கிடைக்கின்றன. அதிகக் கட்டணம் கொண்ட அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா இருக்கும். பூனையின் உரிமை யாளர்கள் ஸ்மார்ட்போன் மூலம் தங்கள் செல்லப் பூனைகளைக் கவனித்துக்கொள்ளலாம்” என்கிறார் கேட்ஜோனியா மேனேஜர்.

இதெல்லாம் ரொம்பவே அநியாயம்...

இந்தோனேஷியாவில் வசிக்கும் 28 வயது சோஃபியன் லோஹோ டேன்டெல், விற்பனைக் கிடங்கில் வேலை செய்துவந்தார். ஒருநாள் அவர் அலைபேசிக்குத் தெரியாத எண்ணிலிருந்து அழைப்புவந்தது. எதிர்முனையில் பேசிய பெண், தவறுதலாக எண்களைப் போட்டுவிட்டதால் மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. அடிக்கடி பேசிக்கொண்டனர். “ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் நட்பைத் தாண்டி காதல் என்ற நிலையை அடைந்தோம். அதுவரை காதலித்த அனுபவம் இல்லை என்பதால் மிகவும் பரவசமாக இருந்தது. மார்தாவை நேரில் சந்திக்க முடிவுசெய்தேன். 120 கி.மீ. பயணம் செய்து, மார்தாவின் வீட்டை அடைந்தேன். அங்கே 82 வயதில் மார்தா என்னை வரவேற்றார். அதிர்ந்துபோனேன். இதில் மார்தாவின் தவறு ஒன்றுமில்லை. நாங்கள் அதுவரை வயது, வருமானம், குடும்பம் குறித்தெல்லாம் பேசிக்கொண்டதே இல்லை. அவரைப் பார்த்துவிட்டு வந்த பிறகும் அந்தக் காதல் அப்படியே இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். மார்தா வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் என் அம்மாவுக்கே 60 வயதுதான் என்பதால், எல்லோரும் அதிர்ந்து போனார்கள். என் மனநிலையை மாற்ற முயற்சிசெய்தார்கள். நான் உறுதியாக நின்றுவிட்டேன். மார்தாவை என் அம்மா நேரில் பார்த்தவுடன் அவரது அன்பில் கரைந்துபோனார். எங்கள் திருமணத்துக்கும் சம்மதித்தார். கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இப்போது நாங்கள் பிரபலமான தம்பதி!” என்கிறார் சோஃபியான். “என் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். என் பிள்ளைகள் ஜெர்மனியிலும் சவுதியிலும் இருக்கிறார்கள். முதுமையில் தனிமை கொடுமையாக இருந்தது. என்னைப் பார்த்துக்கொள்வதற்கு ஒரு நல்ல ஆத்மாவைக் கொடுக்குமாறு கடவுளிடம் வேண்டினேன். ஆனால் சோஃபியன் போன்ற ஒருவரை எனக்குக் கணவராகவே கடவுள் கொடுப்பார் என்று நினைக்கவில்லை” என்கிறார் மார்தா.

காதலுக்கு வயது தடையில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x