

கிறித்துவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறினால் கொலைக் குற்ற வழக்கில் குற்றவாளி என்று குற்றம்சாட்டப்படமால் தப்பிக்கலாம் என்றும் பாகிஸ்தான் மூத்த அரசு வழக்கறிஞர் ஒருவர் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2015-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி லாகூரில் உள்ள யுஹானாபாத்தில் ஞாயிறு பிரார்த்தனை நேரத்தில் இரண்டு சர்ச்களை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று 2 முஸ்லிம்களை கோபமடைந்த கிறித்தவர்கள் கொலை செய்ததாக 42 கிறித்தவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவானது.
இந்நிலையில் 12-க்கும் மேற்பட்ட கிறித்தவர்களை இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறும் அப்படி தழுவினால் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து எளிதில் தப்பிவிடலாம் என்றும் மூத்த அரசு வழக்கறிஞர் சையத் அனீஸ் ஷா என்பவர் மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜராகும் ஜோசப் பிரான்சி என்ற உரிமைகள் ஆர்வலர் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
அரசு வழக்கறிஞர் இவ்வாறு மிரட்டியதை அடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சையத் அனீஸ் ஷா இவ்வாறு நடந்து கொள்வது புதிதல்ல, 6 மாதங்களுக்கு முன்பாக வேறொருவருக்கும் இதே அறிவுரையை அவர் வழங்க அந்த நபர் மறுத்ததாக நசீப் அஞ்சும் என்ற மற்றொரு வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் தங்களை முஸ்லிம் மதகுருமார்கள் வலுக்கட்டாய மதமாற்றம் செய்வதாக கடந்த காலங்களில் குற்றாம்சாட்டி வந்துள்ளனர். ஆனால் சட்ட நடைமுறையின் மீது மண்ணைத் தூவுமாறு மதம் மாறினால் குற்றம்சாட்டப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் என்று அரசு வழக்கறிஞர் ஒருவரே கூறி மிரட்டுவது மிக மோசமானது என்றும் பாகிஸ்தானுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் இவர்களை அரசு அகற்ற வேண்டும் என்றும் அங்கு குரல்கள் எழுந்துள்ளன.