

ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குள் மருத்துவர்களைப் போல உடை அணிந்து நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுமார் 30 பேர் பலியாயினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் காபுல் நகரில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகே சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை செயல் பட்டு வருகிறது. சுமார் 400 படுக் கைகளுடன் கூடிய இது மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
இந்நிலையில் மருத்துவர் களைப் போல உடை அணிந்த மர்ம நபர்கள் நேற்று காலையில் இந்த மருத்துவமனைக்குள் நுழைந் துள்ளனர். இதில் ஒருவர் நுழைவு வாயில் அருகே தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக் கச் செய்துள்ளார். மற்றவர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மருத்துவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனால், நோயாளிகள், மருத் துவர்கள், ஊழியர்கள் அலறி யடித்துக்கொண்டு இங்கும் அங் கும் ஓடி மறைந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர வாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையின் மொட்டை மாடி வழியாகவும் வீரர் கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி உட்பட 30-க்கும் மேற்பட்டோர் பேர் பலியான தாகவும் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் கவாசி தெரிவித்தார். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி யில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி, இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “இது நாட்டு மக்கள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காபுல் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.