Published : 02 Nov 2014 01:20 PM
Last Updated : 02 Nov 2014 01:20 PM

சீர்குலையும் சிரியா - 5

அரசின் தாக்குதல்களால் வெறுத்துப் போன பொது மக்களில் பலரும் ஐ.எஸ்.அமைப்பில் சேர்கிறார்கள். ‘’என் அண்ணனைக் கொன்ற இந்த அரசை சும்மா விடமாட்டேன்’’ என்பதுபோல தனிப்பட்ட பகைமை காரணங்களை தனக்கெதிராக ஏராளமாக உருவாக்கி வருகிறது சிரியா அரசு.

அமெரிக்காவில் கொலாரடோ பகுதியின் டென்வர் நகரில் சமீபத்தில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சி அதிர்ச்சிகரமானது. 15லிருந்து 17 வயது கொண்ட மூன்று மாணவி கள் அமெரிக்காவிலிருந்து சிரியாவுக்குச் செல்ல முடிவெடுத்து கொலாரடோ விமான நிலையத்தை அடைந்துள்ளனர். பள்ளியிலிருந்து இவர்கள் வீடு திரும்பாததால் காவல்துறையிடம் பெற்றோர்கள் புகார் செய்தனர். தேடுதலில் அவர் களைக் கண்டுபிடித்த காவல் துறையினர் ‘’எதற்காக வீட்டுக்குத் தெரியாமல் கிளம்பினீர்கள்? எங்கே செல்வதாகத் திட்டம்?’’ என்று கேட்க, சிறிதும் தயக்கமில்லாமல் வந்த விடை இது. ‘’சிரியாவிலுள்ள ஐ.எஸ்.இயக்கத்தில் சேர்ந்து சிரியாவின் ஆட்சியை கீழே இறக்கச் செல்கிறோம்’’.

காவல்துறை அவர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பியது வேறு விஷயம். சிரியாவின் ஆட்சியை ஓரள வுக்கு மேல் ஐ.நா.வால் கண்டிக்க முடியவில்லை. காரணம் பொதுச் சபையில் சிரியாவுக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானங்களை சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ செய்து தடுத்து விடுகின்றன. இரானும், லெபனானும் (அங்கு ஷியாக்கள் அதிகம் என்பதால்) சிரியா அரசை ஆதரிக்கின்றன.

ஆக சிரியா - ஐ.எஸ். போர் என்பது உண்மையில் பலவித மறைமுகப் போர்களின் திரைபோலவே காட்சியளிக்கிறது. அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இதன் மூலம் தங்கள் பலத்தை சோதனை செய்து கொள்கின்றன.

அமெரிக்கா எதற்காக சிரியா வின் உள்நாட்டுப் போரில் தலையிட வேண்டும்? ‘’வழக்கம்போல அது தன் பெரியண்ணன் தோரணையை காட்டுகிறது’’ என்று மட்டுமே முடிவெடுக்க முடியாது. வேறு பல காரணங்களும் உள்ளன. சிரியா அரசுக்கு எதிரான ஐ.எஸ்., அல் கொய்தாவின் மேலும் தீவிரப்பட்ட வடிவம். ஐ.எஸ்.சிரியாவில் தன் ஆட்சியை நிறுவினால் அது அல் கொய்தாவின் (அமெரிக்க நலனுக்கு எதிரான) செயல்களில் நிச்சயம் ஈடுபடும். ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் ‘இரான், வடகொரியா, இராக் ஆகியவை தீயவற்றின் அச்சாணிகள்’ என்று கருத்து கூறியிருக்கிறார்.

சிரியாவில் ஐ.எஸ். ஜெயித்தாலும், தோற்றாலும் ஒரு காலத்தில் அமெரிக்கா அங்கு போரில் ஈடுபட வேண்டியிருக்கும். இது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், வளைகுடா நாடுகள், பெல்ஜியம், கனடா, ஸ்பெயின் இப்படிப் பல நாடுகள் சிரியாவுட னான தூதரக உறவைத் துண்டித் துக் கொண்டுள்ளன. இரானும், சீனாவும், ரஷ்யாவும் இப்போதை க்கு சிரியாவின் நண்பர்கள்.

இந்த நிலையில் பிரிட்டனிலுள்ள பல நிதி நிறுவனங்களும் முக்கியமாக HSBC வங்கி தங்களிடமுள்ள சிரியா தேசத்து வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கணக்கை முடித்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதியிருந்தன. இதற்குக் கடும் கண்டனம் எழ, சம்பந்தப்பட்ட வங்கி இந்தச் செய்தி தவறென்று சமாளித்திருக்கிறது.

2004 ஜூன் 3 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் அஸாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதை எதிர்கட்சிகள் ஏற்கவில்லை. காரணம் அரசின் வசம் முழுமையாக இருந்த பகுதி களில் மட்டுமே தேர்தல் நடை பெற்றது. தவிர எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. இந்த நிலையில் அஸாத் வென்றது செல்லாது என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. உண்மைதான் என்று ஒத்துக் கொண்டன பல மேலை நாடுகள்.

ஹஜ் பயணம் செல்பவர்கள் மெக்காவிற்குச் செல்வதற்கான ஒரு நுழைவு வாயில் டமாஸ்கஸ் (சிரியாவின் தலைநகர்). அங்கே இப்படிப்பட்ட உச்சகட்ட கலவரங்கள் நடைபெறுவது உலக முஸ்லிம்களுக்கேகூட சங்கடத்தைத் தருகிறது. ஒரு காலத்தில் ஸ்பெயின், ஜோர்டான், பாலஸ்தீனம் போன்றவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருந்த சிரியா இப்போது தன் சிறிய பரப்பே துண்டாடப்படுவதை நினைத்து தவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x