Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM

தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் மலேசிய விமானம் பறந்ததா?- இங்கிலாந்து நாளிதழ் பரபரப்பு தகவல்

மாயமான மலேசிய விமானம் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு பாகிஸ்தானில் நுழைந்திருக்கக்கூடும் என்று இங்கிலாந்து நாளிதழ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

கோலாம்பூரில் இருந்து மார்ச் 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு 239 பேருடன் பெய்ஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.20 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமானது.

கடைசியாக அன்று காலை 8.11 மணி அளவில் இங்கிலாந்து நிறுவனத்தின் இன்மார்சாட் செயற் கைக்கோளில் அந்த விமானத் தின் சிக்னல் பதிவாகியுள்ளது. அதன் படி தாய்லாந்து முதல் கஜகஸ் தான் எல்லை வரையோ அல்லது இந்தோனேஷியா முதல் தென் இந்திய பெருங்கடல் வரையோ விமானம் பறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரு வழிகளிலும் விமானத்தை தேடும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செயற்கைக் கோள் தகவலை ஆதாரமாக வைத்து லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபெண்டன்ட்’ நாளிதழ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

தரையில் இருந்தே சிக்னல்

இன்மார்சாட் செயற்கைக் கோளில் விமானத்தின் சிக்னல் பதிவானபோது அந்த விமானம் வானில் பறந்திருக்க வாய்ப் பில்லை. தரையில்தான் இருந் திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடகிழக்கு பாகிஸ்தானில் விமானம் தரையிறங்கி இருக்கக் கூடும். ஆப்கானிஸ்தானில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளும் வடகிழக்கு பாகிஸ்தான் பகுதிகளும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளில் விமானம் தரையிறக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது. மிகப் பெரிய விமானமான அதனை தரையிறக்க குறைந்தபட்சம் 5 ஆயிரம் அடி ஓடுபாதை தேவை என்று ‘தி இன்டிபெண்டன்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

தாழ்வாகப் பறந்த விமானம்

இதனிடையே மலேசிய புலனாய்வு வட்டாரங்கள் கூறியதாவது:

மாயமான விமானம் கிட்டத் தட்ட 3 நாடுகளின் ராணுவ ரேடார்களில் இருந்து தப்பி பறந்துள்ளது. முதலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த அந்த விமானம் ரேடாரில் இருந்து தப்ப 5 ஆயிரம் அடி உயரத்தில் மிகவும் தாழ்வாகப் பறந்துள்ளது.

ரேடார் கண்காணிப்பு குறைந்த மலைப் பிரதேசங்கள் வழியாகவும் விமானம் பறந்துள்ளது. விமானத் தின் இயக்கம், விமானப் பாதைகள் குறித்து நன்கறிந்த நபர்களால் மட்டுமே இவ்வாறு விமானத்தைச் செலுத்த முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிமுலேட்டரில் விரல் ரேகை

மாயமான விமானத்தை இயக்கிய விமானி ஜகாரி அகமது ஷாவின் கோலாலம்பூர் வீட்டில் இருந்து விமானப் பயிற்சிக்கான சிமுலேட்டரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்த சிமுலேட்டரை பொருத்திய நபர் யார் என்பது குறித்து அறிய அதில் பதிவாகியுள்ள விரல் ரேகைகளை தடயவியல் நிபுணர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல் துணை விமானி பாரிக் அப்துல் ஹமீது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நதிரா ரம்லி என்ற பெண் விமானியை அவர் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிபுணர்கள் வருகை

மலேசியாவுக்கு உதவுவதற்காக இன்மார்சாட் செயற்கைக்கோள் நிபுணர்கள் கோலாலம்பூருக்கு வந்துள்ளனர். அவர்கள் தவிர அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள் உதவியையும் மலேசியா கோரியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. அதிகாரிகளும் கோலாலம்பூரில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே மலேசிய பாதுகாப்பு, போக்குவரத்துத் துறை அமைச்சர் டாடக் செரி ஹிஸ்காமுதின் டன் ஹூசைன் திங்கள்கிழமை மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு துணை விமானி பாரிக் அப்துல் ஹமீது கட்டுப்பாட்டு அறை அதிகாரியோடு பேசியுள்ளார். அவர் கடைசியாக “ஆல் ரைட், குட் நைட்” என்று கூறியுள்ளார். அதன் பின்னர் தகவல் தொடர்பு சாதனங்கள் அணைக்கப்பட்டுவிட்டன.விமானிகளில் யாராவது ஒருவர் தற்கொலை எண்ணத்தில் இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x