அணுசக்தி திட்டங்கள்: வல்லரசுகளுடன் ஈரான் பேச்சு

அணுசக்தி திட்டங்கள்: வல்லரசுகளுடன் ஈரான் பேச்சு
Updated on
1 min read

ஈரானின் அணு மின்திட்டங்கள் குறித்து உலக வல்லரசு நாடுகள் ஜெனிவாவில் 2 நாள் பேச்சுவார்த்தையை துவக்கின.

அதிபர் ஹசன் ரௌகானி தலைமையிலான புதிய அரசு பேச்சுவார்த்தை வெற்றிபெற புதிய யோசனைகளை தெரிவித்துள்ளது. இந்த யோசனைகளை 6 வல்லரசு நாடுகளின் பிரதிநிதிகள் பரிசீலிப்பார்கள். இதன் மூலம் ஒரு ஆண்டுக்குள் ஒப்பந்தம் ஏற்படும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

அணுசக்தி திட்டங்களை ஈரான் கைவிட வலியுறுத்தி அதன் மீது சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தளர்த்த யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தவேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்க மறுத்து வருகிறது ஈரான். இந்நிலையில் தமது நிலை என்னவென்பதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஜெர்மனி அடங்கிய பி5 பிளஸ் 1 அமைப்பிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார் ஈரான் வெளியுறவு அமைச்சர் முகம்மது ஜாவித் ஜரீப்.

யுரேனியம் செறிவூட்டலை குறைத்துக் கொள்ள ஈரான் தயாராக உள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தை உயர்நிலை பேச்சை மேற்கொள்ள வழிவகுக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்ட ஜரீப், அது பற்றி விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.

ஈரான் அதிபராக பழைமைவாதியான மகமூத் அகமதி நிஜாத், 8 ஆண்டு பதவிக் காலத்தை முடித்து வெளியேறிவிட்டதால் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

புதிய அதிபராக ரௌகானி கடந்த ஆகஸ்டில் பதவியேற்றார். அணுசக்தி திட்டங்களில் ஒளிவு மறைவுக்கு இடமில்லை. எண்ணெய் ஏற்றுமதிக்கும் உலக அளவில் வங்கிகளுடன் இணைந்து செயல்பட முடியாத வகையில் சிக்கலை ஏற்படுத்தி ஈரான் பொருளாதாரத்தை முடக்கும் வர்த்தகத் தடைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளார் ரௌகானி.

ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலோ, தேனாக இனிக்கும் ஈரானின் பேச்சில் மதி மயங்கி விட வேண்டாம் என உலக நாடுகளை எச்சரித்து வருகிறது.

ஜெனிவாவில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் முதல் தடவையாக ஆங்கில மொழி பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் அதிகாரிகள்.

ஈரான் என்ன சொல்லப் போகிறது என்பதைப் பொறுத்தே பேச்சுவார்த்தையின் முடிவு அமையும் என்கின்றனர் அமெரிக்க நிர்வாக அதிகாரிகள். தங்களது அணு சக்தி திட்டங்கள் ஆக்கபூர்வ பணிகளுக்கே என ஈரான் திரும்ப திரும்பச் சொன்னாலும், அதை ஏற்க மறுக்கும் மேலைநாடுகளும் இஸ்ரேலும், அணு குண்டு தயாரிக்கவே இந்த திட்டங்களை அந்நாடு மேற்கொள்கிறது என்கின்றன. ஆனால் இதை ஆணித்தரமாக மறுத்து வருகிறது ஈரான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in