Published : 31 Jul 2016 11:28 AM
Last Updated : 31 Jul 2016 11:28 AM

உலக மசாலா: விரைவில் தும்மலில் இருந்து விடுபடட்டும் குழந்தை...

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் லிசா மச்சென்பர்க், ஹிப்னோதெரபிஸ்ட். ஆழ்நிலை தூக்கத்தின் மூலம் பதற்றம், வலி போன்றவற்றை குணமாக்குவதோடு, குழந்தைகளை கையாள்வதற்கும் இந்தக் கலையை பயன்படுத்தி வருகிறார். இதற்கு ‘Hypno Parenting’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். “தொடக்கத்தில் என் குழந்தைகளிடம்தான் இந்தக் கலையை செய்து பார்த்தேன். குழந்தைகளுக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நின்றது. தலைவலி, வயிற்று வலி என்று எப்பொழுதும் ஏதாவது வலியைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். என்னுடைய ஹிப்னோ தெரபியால் அதுவும் மறைந்தது. அடம் பிடிக்கும் குழந்தைகள், சொல் பேச்சைக் கேட்காத கணவர் என்று என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஹிப்னோ தெரபி மூலம் அருமையான மனிதர்களாக மாற்றிவிட்டேன். எங்கள் வீடே அற்புதமாக இருக்கிறது” என்கிறார் லிசா. 17 வயது ரேனா, “எங்க அம்மா கொடுக்கும் ஹிப்னோ தெரபி மூலம் நாங்கள் அனைவருமே அதிகப் பயன் அடைந்திருக்கிறோம். பல நோய்கள் குணமாகியுள்ளன. மன அழுத்தம் வருவதில்லை. தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது” என்கிறார். ஹிப்னோ தெரபி சிறந்த பெற்றோர்களை உருவாக்கும் கருவி என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் இல்லை. ஆனால் நம்பிக்கையுடன் செய்யும்போது சில பலன்கள் கிடைக்கவே செய்கின்றன என்கிறார்கள். “சண்டை, குழப்பம் நிலவிய குடும்பங்களில் ஹிப்னோ தெரபிக்கு பிறகு அமைதி திரும்பியிருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பல குழந்தைகளின் கல்வித்திறன் அதிகரித்திருக்கிறது. 23 ஆண்டுகளில் 1,000 குழந்தைகளுக்கு ஹிப்னோ தெரபி அளித்திருக்கிறேன். ஒருமணி நேரத்துக்கு 8,400 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன். பெற்றோருக்கு ஹிப்னோ தெரபியை கற்றுக் கொடுக்கிறேன். அவர்கள் வீட்டில் தங்கள் குழந்தைகளுக்கு செய்துகொள்ளலாம். குழந்தைகளை எல்லா விதங்களிலும் சிறந்தவர்களாக வளர்க்கும்போது, எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் உருவாகும். நாட்டில் அமைதி நிலவும்” என்கிறார் லிசா.

வசியப்படுத்துவதைவிட இயல்பாகக் குழந்தைகளைக் கையாள்வதுதானே சிறந்தது… இயற்கையானது…

ங்கிலாந்தில் வசிக்கிறார் ஈரா சக்ஸேனா. ஒருமுறை தும்ம ஆரம்பித்தால் அவரால் நிறுத்தவே முடிவதில்லை. ஒரு நிமிடத்தில் 10 முறை ஆக்ரோஷமாக தும்முகிறார். “3 வாரங்களுக்கு முன்பு ஒருநாள் காலை இந்த விசித்திர தும்மல் ஆரம்பித்தது. என் மகளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. எத்தனையோ மருத்துவர்களை பார்த்துவிட்டோம். காரணமும் புரியவில்லை, சிகிச்சையும் கிடைக்கவில்லை. இன்று ஒரு நாளைக்கு 8 ஆயிரம் முறை தும்மும் அளவுக்கு வந்துவிட்டாள். பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தூங்கும்போது மட்டும் தும்மல் வருவதில்லை. அந்த வகையில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம். இதுவரை ஈராவுக்கு எந்தவிதமான அறுவை சிகிச்சைகளும் செய்ததில்லை. தொடர்ந்து மருந்துகளும் கொடுத்ததில்லை. என்ன அலர்ஜி என்றே புரியவில்லை. தூங்கி எழுந்தவுடனே தும்மல் வர ஆரம்பித்துவிடுகிறது. மிகவும் சோர்ந்து விடுகிறாள். சில நேரம் 25 நிமிடங்களுக்குக் கூட விடாமல் தும்முகிறாள். பல மருத்துவ முறைகளை முயற்சி செய்து, இறுதியில் ஹோமியோபதிக்கு வந்திருக்கிறேன். இதிலாவது என் மகளின் பிரச்சினை சரியாக வேண்டும்” என்கிறார் ஈராவின் அம்மா.

விரைவில் தும்மலில் இருந்து விடுபடட்டும் குழந்தை…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x