Last Updated : 20 Jun, 2015 05:46 PM

 

Published : 20 Jun 2015 05:46 PM
Last Updated : 20 Jun 2015 05:46 PM

சவுதி அரேபியா தொடர்பான 5,00,000 ஆவணங்களை வெளியிடுகிறது விக்கிலீக்ஸ்

2010-ம் ஆண்டு அமெரிக்க அரசுதரப்பு ரகசிய ஆவணங்களை உலகிற்கு வெளியிட்டு தைரியம் காட்டிய விக்கிலீக்ஸ் சவுதி அரேபியா நாடு தொடர்பான 5,00,000 ஆவணங்களை வெளியிடவிருக்கிறது.

இது குறித்து விக்கிலீக்ஸ் தனது அறிக்கையில், ‘ஏற்கெனவே 60,000 ஆவணங்களை வெளியிட்டுள்ளோம், ஆனால் பெரும்பாலும் இவை அரபு மொழியில் இருப்பவை’ என்று கூறியுள்ளது.

ஆவணங்களின் உண்மைத் தன்மை

இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை உடனடியாக சரிபார்க்க வழியில்லை எனினும் விக்கி லீக்ஸ் கடந்த காலங்களில் வண்டி வண்டியாக அரச ஆவணங்களை வெளியிட்டுள்ளதை வைத்துப் பார்க்கும் போது, இதன் உண்மைத் தன்மையும் சரியாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

"கிங்டம் ஆஃப் சவுதி அரேபியா" அல்லது “மினிஸ்ட்ரி ஆஃப் ஃபாரின் அஃபேர்ஸ்” என்ற தலைப்பில் இந்த ஆவணங்கள் வெளியாகின்றன. சில ஆவணங்களில் ‘அவசரம்’ என்றும் 'வெளியிடத்தகுந்ததல்ல' என்ற அடையாளமிடப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரக ஆவணம் ஒன்றும் இதில் அடங்கும்.

சவுதி அரேபிய அரசின் உள்விவகாரங்கள் பலவும் வெளி உலகுக்கு தெரியாதவை, இந்த ஆவணங்கள் உண்மையெனில் சவுதி அரேபியாவின் அரசியல் சாணக்கியங்களும் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானுடன் சவுதிக்கு இருக்கும் பகைமை, சிரியா நாட்டு போராளிகளுக்கு சவுதியின் ஆதரவு, மற்றும் எகிப்தின் ராணுவ ஆதரவு ஆட்சிக்கு சவுதியின் ஆதரவு, ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்காக ஏற்படவிருக்கும் சர்வதேச ஒப்பந்தத்திற்கு சவுதியின் எதிர்ப்பு ஆகியவை பற்றிய உள்விவரங்கள் அம்பலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் அணு ஆயுத விவகாரம் குறித்த 2012-ம் ஆண்டின் முக்கிய ஆவணம் ஒன்றும், அபுதாபியில் உள்ள சவுதி தூதரகம் மூலம் எகிப்தின் ஹோஸ்னி முபாரக் மீது விசாரணை வேண்டாம் என்ற யு.ஏ.இ.-யின் வலியுறுத்தல் குறித்த ஆவணமும் வெளியாகும் என்று தெரிகிறது.

ஆனால் பல ஆவணங்கள் சவுதி அரேபியா உள்நாட்டு விவகாரம் தொடர்பானது என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் ஆகஸ்ட் 14, 2008-ம் ஆண்டு, 'கிளாசிபைடு மற்றும் அர்ஜெண்ட்' குறிக்கப்பட்ட ஆவணத்தில், வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் எழுதிய கடிதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதில் சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து சென்றுள்ள மாணவர்கள் பலர் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குச் சென்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, தூதரக அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பின்லேடனின் இறப்புச் சான்றிதழ்

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒசாமா பின்லேடன் மகன் தந்தையின் இறப்பைச் சுட்டிக்காட்டி சான்றிதழ் வாங்கியது குறித்த ஆவணமும் இதில் அடங்கும்.

இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் முயன்றது. விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிரிஸ்டின் ரஃபன்சன், இந்த ஆவணங்கள் உண்மையே என்று தெரிவித்துள்ளார். ஆவணங்கள் எப்படிப் பெறப்பட்டது என்பதை நாங்கள் வெளியிடும் பழக்கமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x