இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த பொன்னி அரிசி: சிங்கப்பூருக்கு அதிக ஏற்றுமதி

இந்தியாவுக்கு பெருமை பெற்றுத் தந்த பொன்னி அரிசி: சிங்கப்பூருக்கு அதிக ஏற்றுமதி
Updated on
1 min read

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. பொன்னி அரிசி இந்தியாவுக்கு இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரிமியம் அரிசி 5 கிலோ 11.45 டாலருக்கு (ரூ.700) விற்பனையாகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் பொன்னி அரிசி 5 கிலோ 7.90 டாலருக்கு (ரூ.483) கிடைக்கிறது.

1998-ம் ஆண்டு முதல் தாய்லாந்துதான், சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருந்தது. இப்போது தாய்லாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து 92 ஆயிரத்து 865 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சிங்கப்பூரின் அரிசி இறக்குமதியில் 32.9 சதவீதமாகும்.

இதே காலகட்டத்தில் தாய்லாந்தில் இருந்து 85 ஆயிரத்து 816 டன் அரிசியை சிங்கப்பூர் இறக்குமதி செய்துள்ளது. இது மொத்த அரிசி இறக்குமதியில் 30.4 சதவீதமாகும். இந்த வரிசையில் வியட்நாம் 3-வது இடத்தில் உள்ளது.

வியட்நாமில் இருந்து 77 ஆயிரத்து 459 டன் அரிசியை சிங்கப்பூர் இறக்குமதி செய்துள்ளது. இது மொத்த இறக்குமதியில் 27.4 சதவீதமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூருக்கான இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 29.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

2009-ம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த அரிசி இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.3 சதவீதமாக மட்டுமே இருந்தது. 1998 முதல் 2011-ம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அரிசி இறக்குமதியில் தாய்லாந்து 50 சதவீதத்துக்கு மேல் பங்களித்து வந்தது.

இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் அளித்த போட்டியால் தாய்லாந்தில் இருந்து இறக்குமதியாகும் அரிசியின் அளவு குறைந்தது. தாய்லாந்து அரிசியை விட இந்திய அரிசியின் விலை குறைவு. இதனால் இறக்குமதியாளர்களின் விருப்பத்துக்குரிய தேர்வாக இந்திய அரிசி மாறிவிட்டது என்று சிங்கப்பூரின் வர்த்தக, தொழில்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in