Published : 21 Jul 2016 09:57 AM
Last Updated : 21 Jul 2016 09:57 AM

உலக மசாலா: தீப்பந்த மீன்பிடிப்பு!

நூறு ஆண்டுகளாக தைவான் மீனவர்கள் வித்தியாசமான முறையில் மீன்களைப் பிடித்து வருகிறார்கள். இரவில் பெரிய மூங்கில் குச்சியில் கந்தக அமிலத்தை ஊற்றி, நெருப்பு வைக்கும்போது மிகவும் பிரகாசமாக எரிகிறது. கந்தக அமிலம் நீரில் விழுந்து நெருப்பையும் புகையையும் உண்டாக்குகிறது. வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மத்தி மீன்கள், நீரை விட்டு மேலே எழும்புகின்றன. அப்போது வலைகளை வீசி மீன்களைப் பிடித்துவிடுகிறார்கள் மீனவர்கள். கந்தக அமிலத் தீயை வைத்து மீன் பிடிக்கும் வழக்கம் தைவான், ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உருவானது. இன்று ஜின்ஷன் துறைமுகத்தில் மட்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் 300 படகுகளில் தீப்பந்தத்தைப் பயன்படுத்தி மீன்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று 3 படகுகளில் மட்டுமே மீன்களைப் பிடித்து வருகிறார்கள்.

ஓர் இரவில், 6 மணி நேரத்தில் ஒவ்வொரு படகும் 3,200 கிலோ முதல் 3,600 கிலோ மீன்களைப் பிடிக்கும். இன்றும் தைவான் அரசு இந்த மீன்பிடிப்புக்கு ஊக்கம் அளித்து வருகிறது. ஓர் இரவில் ஒவ்வொரு குழுவுக்கும் 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனாலும் இந்த மீன்பிடிப்பு அழிந்துகொண்டே வருகிறது. ஆண்டு முழுவதும் மத்தி மீன்கள் கிடைப்பதில்லை. மே முதல் ஜூலை வரையிலான 3 மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன. தீப்பந்த மீன்பிடிப்பை அரசு சுற்றுலாவாக மாற்றிவிட்டது. ஆனால் இந்த மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். இளைய தலைமுறையினர் நவீன கருவிகளைக் கொண்டு மீன் பிடிப்பதையே விரும்புகின்றனர். அதனால் வெகுவிரைவில் தீப்பந்த மீன்பிடிப்பு மறைந்து விடும் என்கிறார்கள்.

ஆச்சரியம் தரும் தீப்பந்த மீன்பிடிப்பு!

இத்தாலியின் கலெக்டோ ஃபாவா மலையில் ராட்சச இளஞ்சிவப்பு முயல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு கால்களையும் நீட்டியபடி முயல் ஒன்று படுத்திருக்கிறது. கண்களையும் வாயையும் பார்க்கும்போது இறந்த முயல் போன்று தோற்றம் அளிக்கும். ஆனாலும் முயலைப் பார்த்தால் புன்னகை தானாகவே வந்துவிடும். வியன்னாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலர் இந்த முயலை உருவாக்கியிருக்கிறார்கள். 200 அடி நீளமும் 20 அடி தடிமனும் கொண்டது. வைக்கோலை உள்ளே வைத்து, மேலே மென்மையான தண்ணீர்ப் புகாத துணியால் தைத்திருக்கிறார்கள். 2005-ம் ஆண்டு முயல் உருவாக்கப்பட்டது. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் முயல் மீது ஏறி விளையாடுகிறார்கள், நடக்கிறார்கள்.

“கலைப் படைப்புக்காக முயலை நாங்கள் உருவாக்கவில்லை. மலை ஏறி வருகிறவர்கள், முயலிடம் வந்து இளைப்பாற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கினோம். ஒருவேளை நாங்கள் கண்ணாடி பெட்டிக்குள் முயலை வைத்திருந்தால் இன்னும் பல காலத்துக்கு முயல் நிலைத்திருக்கும். ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை. இயற்கையான வானிலை காரணமாக இந்த முயல் எவ்வளவு காலம் இருக்குமோ அதுவரை இருக்கட்டும். இதை இனி பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லை. 2025-ம் ஆண்டு தானாகவே அழிந்து, மறைந்துவிடும்” என்கிறார் கெலிடின் என்ற கலைஞர்.

அழிந்து வரும் ராட்சச முயல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x