தேவயானி வழக்கை வாபஸ் பெற மாட்டோம்: அமெரிக்கா பிடிவாதம்

தேவயானி வழக்கை வாபஸ் பெற மாட்டோம்: அமெரிக்கா பிடிவாதம்
Updated on
1 min read

இந்தியத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை ஒருபோதும் வாபஸ் பெற மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தேவயானி மீதான வழக்கு வலுவாக உள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். விசா விண்ணப்பத்தில் தேவயானி குறிப்பிட்டது பணிப்பெண் சங்கீதாவின் ஊதியம்தான், அதில் எவ்வித சந்தேகமோ குழப்பமோ இல்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பணிப்பெண் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் 2 குழந்தைகளும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டது குறித்து கேட்டபோது, பாதிக்கப்பட்ட பணிப்பெண், அவரது குடும்பம், சாட்சிகளைப் பாதுகாப்பது அமெரிக்க நீதித் துறையின் கடமை. அதன் அடிப்படையில்தான் அவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டனர் என்று அந்த வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

தேவயானி ஏற்கனவே ஐ.நா. தூதர் என்றால் இப்போது ஏன் அவரை ஐ.நா. தூதரகப் பணிக்கு இந்தியா மாற்ற வேண்டும். அவர் வெறும் தூதரக அதிகாரிதான். தேவயானி வழக்கில் அனைத்து தகவல்களும் பதிவேடுகளில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப் பட்டுள்ளன. ஐ.நா. தூதருக்குரிய உரிமைகளை அவர் பெற்றால் அதன்படி அவர் வெளிநாடுகளுக்குச் செல்லலாம். அவர் மீதான வழக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஆனால் ஒரு போதும் வாபஸ் பெறப்படாது.

பணிப்பெண் சங்கீதாவுக்கு விசா பெற்றதில் தேவயானி சட்ட விதிகளை மீறியுள்ளார். அதுமட்டுமல்ல, பணிப்பெண் சங்கீதாவையும் விதிகளை மீறச் செய்துள்ளார். இந்த வழக்கில் ஒருவேளை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் அவர் தூதரக உரிமையை கோரியிருப்பார் அல்லது தப்பியோடி இருப்பார். அதனால்தான் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை.

அவர் கைது செய்யப்பட்டபோது சட்ட விதிகள் முறையாக கடைப் பிடிக்கப்பட்டன. அவருக்கு கைவிலங்கு இடப்பட்டதாகக் கூறப்படுவது தவறான தகவல். அவர் சிறையில் மிக குறுகிய நேரமே தங்க வைக்கப்பட்டிருந்தார். அவரது அறை தூய்மையாக வைக்கப்பட்டிருந்தது. அவர் மிகவும் கவுரமாக நடத்தப்பட்டார். தூதர் உள்பட யாராக இருந்தாலும் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்துவது என்பது அமெரிக்காவின் சட்டவிதி. அந்த விதியில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது என்று அமெரிக்க வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in