

சைப்ரஸ் நாட்டிலுள்ள நிகோஸியா தனியார் பல்கலைக்கழகம் டிஜிட்டல் பண வடிவமான பிட்காயின்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. கல்விக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து வகைக் கட்டணங்களையும் பிட்காயின்களாகச் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.
பிட் காயின் (டிஜிட்டல் கரன்சி- எண்ம நாணயம்) முறையை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா. இவ்வகை நாணயங்களை எந்த தனி அரசாங்கமும் வெளியிடுவதில்லை. மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதோ ஒரு மத்திய அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, இந்நாணயங்கள் செல்லுபடியாகின்றன. ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் மோசடி செய்ய முடியாது.
பிட் காயின்களை தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். பிட்காயின் கணக்கு வைத்துள்ள யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை மாற்ற முடியாது. சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களை பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
தற்போது பிட்காயின்களை நிகோஸியா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. இவ்வாறு அறிவித்துள்ள முதல் பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டிஜிட்டல் கரன்சி துறையில் முதுநிலை அறிவியல் படிப்பையும் வரும் ஆண்டு அறிமுகப்படுத்தப்போவதாக அந்தப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டிஜிட்டல் பணம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் தவிர்க்க முடியாத அங்கம் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆன்லைன் வர்த்தகம், நிதிசார்ந்த செயல்பாடுகள், சர்வதேச அளவிலான கட்டணம், பணம் செலுத்துகை, உலக பொருளாதாரா மேம்பாடு ஆகியவற்றில் இது முக்கியப்பங்கு வகிக்கும். பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பிட்காயின் மூலம் கட்டணம் செலுத்தலாம்’ என தெரிவித்துள்ளது.
சைப்ரஸ் தற்போது நிதி நெருக்கடியில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கி 1300 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதிஉதவி அளிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதன் 47.5 சதவீத முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டனர்.
சைப்ரஸ் நிதிச்சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.