

விசா மோசடி வழக்கில் குற்றச் சாட்டு பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடே சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் பிரீத் பகாரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் வேலைசெய்த பணிப் பெண் சங்கீதாவுக்கு விசா பெற்றபோது தவறான தகவல்களை அளித்ததாக குற்றம் சாட்டி இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை அமெரிக்க போலீஸார் கடந்த டிசம்பர் 12-ம் தேதி கைது செய்தனர். பணிப்பெண்ணுக்கு மிகவும் குறைவாக ஊதியம் வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க சட்ட நடைமுறைகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். அதன்படி ஜனவரி 13-க்குள் தேவயானி கோப்ரகடே மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை பதிவு செய்ய அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பகாரா நடவடிக்கை மேற் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தேவயானியின் வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக், நியூயார்க் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சாராவிடம் திங்கள்கிழமை ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் ஜனவரி 13-ம் தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும், குற்றச்சாட்டு பதிவை மேலும் ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு அரசுத் தரப்பு வழக் கறிஞர் பிரீத் பகாரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க சட்டவிதிகளில் இருந்து தப்பிக்க தேவயானி முயற்சி மேற்கொள்கிறார். அவர் மீது ஜனவரி 13-ம் தேதி முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக பகாரா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் நிருபர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது, தேவயானி கோப்ரகடே வழக்கால் இந்திய- அமெரிக்க உறவு பாதிக்கப்படக் கூடாது, அது பாதிக்கப்படாது என்றே கருதுகிறேன் என்றார்.
வழக்கை ஏற்க முடியாது
தேவயானி விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக செய்தித் தொடர்பாளர் தரன் மதுசூதனன், வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தூதர் என்றும் பாராமல் தேவயானியை கைது செய்து ஆடைகளைக் களைந்து சோதனை செய்து கிரிமினல்களுடன் ஒரே அறையில் அடைத்ததை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் வியன்னா ஒப்பந்தம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியா கோருவதில் தவறில்லை.
பணிப்பெண் சங்கீதாவுடனான பணி ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது. இந்த விவகாரத்தை இந்திய நீதிமன்றத்தில் விசாரிப்பதுதான் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.-பி.டி.ஐ.