வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் படுகொலை

வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் படுகொலை

Published on

வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அண்மை காலங்களாக அதிகரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் இந்து கோயில் அர்ச்சகர் ஒருவரை தீவிரவாதிகள் குத்தி கொலை செய்தனர். அவருக்கு உதவ முன்வந்த பக்தர் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதே போல் கடந்த ஞாயற்றுக்கிழமை வழக்கமான பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு சென்ற கிறிஸ்தவ தொழிலதிபர் ஒருவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த கொலை செய்தனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களுக்குள் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரி பாபுல் அக்தரின் மனைவியையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில் இந்து அர்ச்சகர் ஒருவர் நேற்று மீண்டும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.

அனந்த கோபால் கங்குலி (65) என்பவர் சதர் உபஜில்லா என்ற இடத்தில் உள்ள நொல்தங்கா கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று பூஜைகள் செய்வதற்காக வீட்டில் இருந்து கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரை இடைமறித்த ஒரு கும்பல் சராமாரியாக தாக்கியது. பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இந்த சம்பவத்தை அடுத்து ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அந்த மூன்று பேரும் தடைசெய்யப்பட்ட ஜமாதுல் முஜாஹிதீன் வங்கதேச அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது. இவர்கள் தான் கடந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரி பாபுல் அக்தரின் மனைவியை சுட்டுக்கொன்றவர்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்து அர்ச்சகர் கொலை சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஏப்ரலில் ராஜ்சாஹி என்ற நகரில் வீட்டை விட்டு வெளியே வந்த பேராசிரியர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். அதே மாதம் இந்து தையல்காரர் ஒருவரும் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த சம்பவங்களுக்கு ஐஎஸ் மற்றும் அல் குவைதா தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றாலும் வங்கதேச அரசு அதனை மறுத்து வருகிறது.

வங்கதேசத்தில் இஸ்லாம் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களை ஐஎஸ் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்தடுத்து கொலை செய்து வரும் இந்த சிறுபான்மையின மக்கள் பீதியடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in