Published : 30 May 2017 08:44 am

Updated : 28 Jun 2017 21:12 pm

 

Published : 30 May 2017 08:44 AM
Last Updated : 28 Jun 2017 09:12 PM

மோரா புயல் வங்கதேசத்தில் கரையைக் கடந்தது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மோரா புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.00 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மனிக்கு 117 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

வங்கதேசத்தின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு புயல் கரையைக் கடந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே அதிகாரிகள் கரையோரப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோரா என்றால் வங்கதேச மொழியில் மரணம் என அர்த்தம்.

> புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன்?>

சாதாரணமாக வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தாலேயே புயல்கள் உருவாகுகின்றன. எப்பொழுதெல்லாம் காற்று சூடாகிறதோ, அது விரிந்து லேசாகிறது. லேசான காற்று மேலே செல்கிறது. அது ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பக் கனமான குளிர்ந்த காற்று ஓடோடி செல்கிறது. இந்தக் காற்று செல்லும் வேகம் காரணமாகவே புயல்கள் உருவாகுகின்றன.

புயலின் வகைகள்:

புயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.

இந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ. வேகத்துக்கு அதிகமாக காற்று வீசுபவை.

அதேநேரம் புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typoon (சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.

பெயர் சூட்டுதல்

அடுத்ததாக ஒவ்வொரு புயலுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டுவதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.

பெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம். பெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது. ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

இந்தியப் பெருங்கடலில்...

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.

வங்கதேசம்மோரா புயல்புயல் கரையைக் கடந்ததுடாக்கா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x