மலேசியாவில் கொல்லப்பட்ட கிம் ஜாங் நம்மின் மகன் வீடியோவில் பேச்சு: குடும்ப பாதுகாப்பு குறித்து அச்சம்

மலேசியாவில் கொல்லப்பட்ட கிம் ஜாங் நம்மின் மகன் வீடியோவில் பேச்சு: குடும்ப பாதுகாப்பு குறித்து அச்சம்
Updated on
1 min read

வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங் நம்மின் மகன், தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து யூடியூப்பில் வெளி யிட்ட வீடியோவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நம். இவரை மலேசிய விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2 பெண்கள் விஷம் கொடுத்து கொலை செய்தனர். இதன் பின்னணியில் வடகொரிய அதிபர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நம்மின் மகன் கிம் ஹன்-சோல் கடந்த செவ்வாய்க்கிழமை யூடியூப்பில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் 40 விநாடிகள் மட்டுமே ஆங்கிலத்தில் அவர் பேசியுள்ளார்.

வீடியோவில், ‘‘என் பெயர் கிம் ஹன்-சோல். கிம் குடும்ப உறுப்பினர். வடகொரியாவை 3 தலைமுறைகளாக ஆட்சி செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை (கிம் ஜாங் நம்) சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். நான் தற்போது தாய் மற்றும் சகோதரியுடன் இருக்கிறேன். விரைவில் நிலைமை சீராகும் என்று நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார். தான் கிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு பாஸ்போர்ட் ஆதாரத்தையும் அந்த வீடியோவில் காட்டுகிறார்.

இந்த வீடியோ கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்ட பிறகு ஓரிரு நாட்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. தனது குடும்பத்தின் பாதுகாப்பில் அச்சம் அடைந்தே கிம் ஹன்-சோல் இந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும். கிம் ஜாங் நம் குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், மக்காவ் நாட்டில் சீனாவின் பாதுகாப்பில் அவர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் வீடியோவில் பேசியிருப்பது கிம் ஜாங் நம்மின் மகன்தான் என்று தென் கொரிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in