

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தனது பதவிக் காலம் வரை மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்று அந்த மாகாண ஆளுநர் ஜே இன்லே அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 50 மாகாணங் கள் உள்ளன. இதில் 18 மாகாணங்களில் மரண தண்டனை சட்டபூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற 32 மாகாணங்களில் மரண தண்டனை இன்னமும் அமலில் உள்ளது.
இந்நிலையில் வாஷிங்டன் மாகாண ஆளுநர் ஜே இன்லே செவ்வாய்க்கிழமை ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தனது பதவிக் காலத்தில் வாஷிங்டன் மாகாணத்தில் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்று அவர் அறிவித்துள்ளார்.
மரண தண்டனை தொடர்பான கருணை மனு தனது பரிசீலனைக்கு வரும்போது, அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்படும். அதேநேரம் குற்றவாளிக்கு மன்னிப்போ, தண்டனைக் குறைப்போ ஒரு போதும் வழங்கப்படாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய குறிக்கோள். ஆனால் மரண தண்டனை வழக்குகளில் சமமான நீதி வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதுதொடர்பாக கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள், தண்டனையை நிறைவேற்றுபவர் கள், போலீஸார், சட்டநிபுணர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. அதன்பின் பல மாதங்களாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மரண தண்டனையை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது என்று ஆளுநர் ஜே இன்லே கூறியுள்ளார்.
வாஷிங்டன் மாகாணத்தில் தற்போது 9 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர். இவர்களில் 12 வயது சிறுமியைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜோனத்தான் லீ ஜென்ட்ரிக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. தனது மரண தண்டனையை குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவும் அண்மையில் நிராகரிக்கப்பட்டது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர் ஜே இன்லேவின் அறிவிப்பு அவரது மரணத்தை தள்ளி வைத்திருக்கிறது. அடுத்து வரும் ஆளுநரின் முடிவைப் பொறுத்து மாகாணத்தில் மரண தண்டனை தொடருமா, ரத்து செய்யப்படுமா என்பது தெரியவரும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.