

அண்டார்டிகாவில் உருகும் பனியின் ஒட்டு மொத்த அளவில் 90 சதவீதம், பனிப்பாறைகளின் மூழ்கிய பகுதிகள் உருகுவதால் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பிரதான பனிப்பிரதேசத்தில் இருந்து உடைந்து மிதக்கும் பனிப்பாறைகள் உருவாவது மற்றும் பனிப்பரப்புகள் உருகுவது ஆகிய காரணங்களால், ஆண்டு தோறும் 2,800 கன சதுர கி.மீட்டர் பரப்புள்ள பனிஅடுக்கு (ஐஸ் ஷீட்) அண்டார்டிகாவில் இருந்து இழக்கப்படுகிறது.
இதில் பெருமளவு இழப்பு பனிப்பொழிவால் ஈடு செய்யப்படுகிறது. இருப்பினும், பனி இழப்பை முழுமையாக ஈடு செய்யமுடியாததால் ஏற்படும் சமச்சீரற்ற நிலை புவியின் கடல் மட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பனியாறுகளின் முனைப் பகுதிகள் உடைந்து, மிதக்கும் பனிப்பாறைகள் உருவாவதுதான், பனி உருகி இழப்பு ஏற்படுவதற்குக் காரணம் என பல்லாண்டுகளாக நிபுணர்கள் கருதி வந்தனர்.
ஆனால், பனிப்பாறைகளின் மூழ்கிய பகுதிகள் உருகுவதால் தான் புதிய பனிப்பாறைத் திட்டுகள் உருவாகின்றன என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில், அட்ரெச்ட் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
செயற்கைக் கோள்கள், வான் மிதவை ஆய்வுக் கலங்கள், பருவநிலை மாதிரித் தரவுகள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பனிப்பாறைகளின் மூழ்கிய பகுதிகள் தானாக உருகுவதால், பிரதான பனித்திட்டு உடைந்து புதிய மிதக்கும் பனிப்பாறைகள் ஏற்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பனி இழப்பின் ஒட்டு மொத்த அளவில் இச்செயல்பாட்டின் பங்களிப்பு 90 சதவீதம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள், "இயற்கை" என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. பனி அடுக்குகள் பருவநிலைப் பகுதிகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன, குறிப்பாக கடலுடன் எப்படி இணைகின்றன என்பது பற்றிய புரிதல்களுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் உதவும்.
ஆண்டுதோறும் உயர வேண்டிய பனி அடுக்கின் அளவு, கடந்த 10 ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது.
ஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் ஜோனதன் பாம்பர் கூறுகையில், "கடலில் எவ்வளவு பனிப்பாறைகள் கலந்து உருகு கின்றன என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயமாகும். எந்தப் பாறை அதிகளவில் உருகி, கடலின் பருவநிலையில் மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு உதவும்" என்றார்.