

போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கையே முன்வந்து விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளை தெரிவித்த யோசனையை இலங்கை நிராகரித்துவிட்டது.
இது தொடர்பாக ஐநா.வுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசிங்கே ஜெனீவாவில் இன்று கூறுகையில் “இலங்கை தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்த வேண்டுமென்று கூற நவி பிள்ளைக்கு உரிமை கிடையாது. இலங்கை அரசு இதுவிஷயத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன்தான் நடந்து வருகிறது. சர்வதேச சமூகம் இலங்கையை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே தவிர முடக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது” என்றார் அவர்.
முன்னதாக, ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளை, ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று இறுதிக் கட்டப் போரின்போது அங்கு நிகழ்ந்த சம்பவங்கள், ஈழத்தமிழர்களின் இப்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார். இது தொடர்பான அவரது அறிக்கை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வாய்மொழியாக அறிவிக்கப்பட்டது.
அப்போது பேசிய நவி பிள்ளை, போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகத்தன்மையுடன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இதனை மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும். இலங்கை அப்படி நடந்து கொள்ளாதபட்சத்தில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தனிப்பட்ட முறையில் இலங்கை போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப் பரிந்துரைப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இலங்கை பதிலளித்துள்ளது.
இறுதிக் கட்டப் போரின்போது பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டது, ராணுவம் விசாரணையின்றி பலரைச் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சேனல் 4 வெளியிட்ட விடியோ போன்றவை தொடர்பாக மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றதாக எனக்குத் தெரியவில்லை. குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாக இல்லை என்றும் நவி பிள்ளை தெரிவித்திருந்தார்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதா க ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இலங்கை அரசு இக்குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.