

இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, விடுதலைப்புலிகள் அமைப்பின் (எல்டிடிஇ) சித்தாந்தத்தை (தனி நாடு) ஒழித்துக் கட்டப் போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா சபதம் செய்துள்ளார்.
தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தேஹிவெலாவில் நேற்று (செவ்வாய்) நடந்த நிகழ்ச்சியில் சிறிசேனா பேசியதாவது:
இலங்கையில் அனைத்து இன மக்களும் அமைதியாகவும் நல்லிணக்கமுடனும் வாழ வழிவகை செய்து வருகிறேன். குறிப்பாக பெரும்பான்மையாக உள்ள சிங்களர்கள் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்துவதே தலையாய பணியாகும். அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.
நான் அதிபராக பொறுப்பேற்றது முதல் அனைத்து உலக தலைவர்களுடனும் சுமுகமாக பழகி நட்பை பலப்படுத்தி வருகிறேன். எனவே, என்னுடைய இந்த முயற்சிக்கு உலக தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததையடுத்து துப்பாக்கி சத்தம் ஓய்ந்துள்ளது. ஆனால், நீண்டகால அடிப்படையில் நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை அழிக்க முடியவில்லை.
இந்த சித்தாந்தம் இன்னும் உயிரோட்டமுடன் உள்ளது. எனவே, நாட்டில் நீண்டகால அடிப்படையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இந்த சித்தாந்தத்தை ஒழித்துக் கட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்ற மைத்ரிபால சிறிசேனா, போரால் புலம்பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், இந்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவில் நடைபெறாததால் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து 37 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போரில் சுமார் 1 லட்சம் பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.