

அமெரிக்காவில் பருவநிலை மாறுபாடுகளால் ஏற்படும் பாதிப்பு களைச் சமாளிக்க ரூ.6100 கோடியில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளார்.
அடுத்த மாதம் தாக்கல் செய்யவுள்ள 2015-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே இத்திட்டம் குறித்து ஒபாமா மக்களுக்கு விளக்குவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தில் பருவ நிலை மாறுபாட்டால் கடும் வறட்சி நிலவுகிறது. அந்த மாகாணத்தின் 90 சதவீத பகுதிகள் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளதாக அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கலிபோர் னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய அதிபர் ஒபாமா, விவசாயிகளுடனும் கலந்துரையாடினார். கடும் வறட்சி காரணமாக கலிபோர்னியா மக்கள் தங்களது தண்ணீர் பயன்பாட்டை 20 சதவீதம் குறைத்துக் கொள்ளுமாறு மாகாண ஆளுநர் ஜெர்ரி பிரவுண் கேட்டுக் கொண்டுள்ளார்.
கலிபோர்னியா மட்டுமன்றி டெக்ஸாஸ், கொலரோடோ, நியூமெக்ஸிகோ உள்ளிட்ட மாகாணங்களிலும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாறுபாடே இதற்கு முக்கிய காரணம் என்று வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பருவநிலை மாறு பாட்டால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க ரூ.6100 கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த அதிபர் ஒபாமா திட்டமிட்டுள்ளார்.
இந்தத் தகவலை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் வறட்சி, வெப்பம் அதிகரிப்பு வழக்கமானதுதான், ஆனால் இந்த முறை வறட்சி மிக மோசமாக உள்ளது. இந்த நேரத்தில் விவசாயிகளையும் மக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பெரும்புயல்கள் உருவாகும். தற்போது ஆண்டுதோறும்கூட பெரும் புயல்கள் வீசுகின்றன. இதுபோன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்களையும் நாட்டின் உள் கட்டமைப்புகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.