இந்தியாவில் ஜப்பான் பேரரசர் ஒரு வாரம் சுற்றுப்பயணம்

இந்தியாவில் ஜப்பான் பேரரசர் ஒரு வாரம் சுற்றுப்பயணம்
Updated on
1 min read

ஜப்பான் பேரரசர் அகிஹிடோ (79) மற்றும் பேரரசி மிச்சிகோ ஆகியோர் இந்தியாவில் ஒரு வார சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக சனிக்கிழமை டோக்கியோவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டனர்.

ஜப்பான் பேரரசர் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. எனினும், கடந்த 1960-ல் இளவரசராக இருந்தபோது அகிஹிடோ இந்தியாவுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அகிஹிடோ சந்தித்துப் பேசுகிறார். பின்னர் சென்னைக்கும் வர உள்ளார்.

டெல்லி புறப்படுவதற்கு முன்பு ஹனடா விமான நிலையத்தில் பேரரசர் அகிஹிடோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "இரு நாடுகளுக்கிடையே ராஜ்ஜீய உறவு ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.

ஏற்கெனவே இந்தியா வந்ததை அகிஹிடோ நினைவுகூர்ந்ததாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் அவர், "எனது திருமணத்துக்குப் பிறகு டெல்லி சென்றிருந்தபோது, அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், துணைத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தலைவர்கள் சுதந்திரத்துக்காகவும், சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வழிநடத்தவும் மிகவும் முக்கியப் பங்கு வகித்தனர் என்றும் அகிஹிடோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்பான் பேரரசருக்கு அரசியல் அதிகாரம் இல்லை. ஆனால் அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in