இலங்கை இறுதிக் கட்ட போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன: பிரிட்டிஷ் ஊடகம் தகவல்

இலங்கை இறுதிக் கட்ட போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன: பிரிட்டிஷ் ஊடகம் தகவல்
Updated on
1 min read

இலங்கை இறுதிக் கட்ட போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன என்று பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் க்ளஸ்டர் கொத்து குண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின்போது சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொத்து குண்டுகளால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை வீசியது உண்மைதான் என்று பிரிட்டனைச் சேர்ந்த தி கார்டியன் நாளிதழ் புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொத்து குண்டுகளின் 42 பாகங்கள் ஆனையிரவு, பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் படங்களை தி கார்டியன் வெளியிட்டுள்ளது. இது இலங்கை ராணுவத்துக்கு எதிரான வலுவான சாட்சியமாக அமைந்துள்ளது.

இறுதிப் போரின்போது தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். தற்போதைய அமைச்சர் சரத் பொன்சேகா ராணுவ தளபதியாக இருந்தார் என்றும் அந்த நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஹலோ டிரஸ்ட் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதன் முன்னாள் ஊழியர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் கார்டியனின் செய்தி இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in