தாய்லாந்தில் அரசு எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

தாய்லாந்தில் அரசு எதிர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
Updated on
1 min read

தாய்லாந்தில் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடர்கிறது. பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடந்த எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தாய்லாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் யிங்லக் ஷினவத்ரா வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், யிங்லக் ஷினவத்ரா வெளிநாட்டில் வசிக்கும் தன் அண்ணன் தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தக்ஷின் ஷினவத்ராவின் ஆட்சி 2006 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தக்ஷின் ஷினவத்ராவுக்கு பொது மன்னிப்பு வழங்க தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், யிங்லக் ஷினவத்ராவின் ஆட்சியில் ஊழலும் முறைகேடுகளும் மலிந்து விட்டதாகவும் கூறி எதிர்க்கட்சியினர் கடந்த சில வாரங்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தை பிரதமர் யிங்லக் கலைத்து விட்டார். வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

ஆனால், இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சி கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காபந்து பிரதமராகச் செயல்படும் யிங்லக் முழுமையாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரி அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாங்காக் வீதிகளில் அரசு எதிர்ப்பாளர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி பிரம்மாண்டப் பேரணி நடத்தினர். ஐந்து முக்கிய வீதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்ததால், போக்குவரத்து முடங்கியது. இதனிடையே, தாய்லாந்து ராணுவத் தலைமை, “தற்போதுள்ள அரசியல் வேறுபாடுகள் உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டுவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in