

சிரியாவின் தென்கிழக்குப் பகுதியில் ஐஎஸ்ஸுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 சிறுவர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட செய்தியில், "சிரியாவில் வியாழக்கிழமை ராக்கா பகுதியில் அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 சிறுவர், சிறுமியர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராணூவத்தினர் சிரியா மற்றும் இராக்கில் ஐஎஸ்ஸுக்கு எதிரான சண்டையில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளது.
சிரியாவின் ராக்கா பகுதியில் ஐஎஸ்ஸுக்கு எதிராக அரசுப் படைகளும், அமெரிக்க படைகளும் கடுமையாக சண்டையிட்டு வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட தற்காலிகமாக 100 கடற்படைவீரர்களை அந்நாட்டுக்கு அமெரிக்க அனுப்பியுள்ளதாக அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசூலிலும் தொடரும் வான்வழி தாக்குதல்கள்
இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளில் கோட்டையாக விளங்கிய மோசூல் நகரில் பாதிக்கு மேற்பட்ட இடங்களை அரசுப் படைகள் தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மீதமுள்ள பகுதிகளில் ஐஎஸ்ஸுக்கு எதிராக அமெரிக்க படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மோசூல் நகரில் நிகழும் தொடர் சண்டையின் காரணமாக ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள் பலர் அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.