

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) புகழ்பெற்ற ஜாயத் சர்வதேச விருது (சுற்றுச்சூழல்) இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் நிபுணர் அசோக் கோஸ்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் டெவலப்மென்ட் ஆல்டர்னேட் டிவ்ஸ் குழுமத்தின் நிறுவனரான கோஸ்லாவின் சாதனையை கவுரவிக்கும் வகையில், ரூ.1.8 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் துறையில் அறிவியல், தொழில்நுட்ப சாதனைக்காக (2-வது பிரிவு) வழங்கப்படும் இந்த விருது, அசோக் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ஜாக்ரி அப்துல் ஹமீது ஆகிய இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. இவர், 2005 மில்லினியம் ஈகோ சிஸ்டம் மதிப்பீட்டு அறிக்கையின் துணைத் தலைவர் ஆவார்.
சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான சர்வதேச தலைமைக்கான (முதல் பிரிவு) விருதை மொனாகோ நாட்டு இளவரசர் ஆல்பர்டுக்கு (2) வழங்கப்பட் டுள்ளது. இயற்கை வளம் மற்றும் எரிசக்தித் துறையின் நீடித்த வளர்ச்சிக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் மற்றும் குழு வினரை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும், இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது.
யுஏஇ முன்னாள் அதிபர் ஷேக் ஜாயத் பின் சுல்தான் அல் நயனின் சுற்றுச்சூழல் ஆர்வத்தை அங்கீ கரிக்கும் வகையில், இப்போதைய துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்த 1999-ல் இந்த விருதை நிறுவினார்.