

உக்ரைன் மீது பறந்த விமானத்தை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சுட்டுக் கொன்ற விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தப்ப முடியாது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்.எச்.17 ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டது. அதனால் அதில் பயணித்த 298 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 38 ஆஸ்திரேலியர்களும் பலியாயினர். இந்த விபத்தில் பலியான ஆஸ்திரேலியர்கள் தொடர்பாக விளாடிமிர் புதினுடன் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஜி20 நாடுகளின் மாநாட்டில் தான் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகக் கடந்த மாதம் அபோட் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஜி20 மாநாட்டுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை. அதனால் மாநாடு நடப்பதற்கு முன்பே புதினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறேன். அவர் கட்டாயம் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ள வேண்டும். இதிலிருந்து அவர் தப்ப முடியாது" என்று கூறியுள்ளார்.
ஆனால் இப்போது வரை ரஷ்யாவிடமிருந்து இதற்கு எந்தப் பதிலும் வரவில்லை.