சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ்: மருத்துவ உதவி செய்யப்படும் என மத்திய அரசு உறுதி

சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ்: மருத்துவ உதவி செய்யப்படும் என மத்திய அரசு உறுதி
Updated on
1 min read

சிங்கப்பூரில் 13 இந்தியர்கள் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சீனா, இந்தியா, மலேசியா உட்பட பல்வேறு நாட்டினர் வசிக்கின்றனர். உலகம் முழுவதும் ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் ஜிகா வைரஸ் பாதிப்பு சிங்கப்பூரிலும் பரவி உள்ளது. இந்நிலையில், தமிழர்கள் உட்பட 114 பேர் ஜிகா வைரஸால் பாதிக் கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப்பிடம் நேற்று ராய்ட்டர்ஸ் செய்தியாளர் விசாரித்தார். அப்போது ஸ்வரூப் கூறும் போது, “சிங்கப்பூரில் கட்டுமான தொழில் நடைபெறும் இடத் தில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் 13 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

கர்ப்பிணி பாதிப்பு

இதற்கிடையில் முதல் முறை யாக கர்ப்பிணி ஒருவர் ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டிருப்பதை சிங்கப்பூர் மருத்துவர்கள் கண்டுபிடித்துள் ளனர். இதன்மூலம் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆனது. இதுகுறித்து சுகாதாரம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறும்போது, “சிங்கப்பூரில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை நிறைந்த பகுதியில் (சிங்கப்பூரின் தென்கிழக்கில் உள்ள சிம்ஸ் டிரைவ் அல்ஜுனிட் கிரசென்ட் பகுதி), அந்த கர்ப்பிணி வசித்து வருகிறார். அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து அவரை உடனடியாக கே.கே.பெண்கள் மற்றும் சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட் டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவருக்கும், அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையின் நலனையும் உறுதிப்படுத்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிய ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

ஜிகா வைரஸால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால், அது அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கம். ‘மைக்ரோசிபெலி’ என்ற பாதிப்பால் தலை சிறிதாகி குழந்தை பிறக்கும். அது குழந்தை வளர்ச்சிக்குப் பல வகைகளில் பாதிப்பை உண்டாக்கும்’’ என்று அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருவதைத் தடுக்க, சிங்கப்பூர் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று தேசிய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in