

சிரியா ரசாயன தாக்குதல் விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய ஐ.நா. ரசாயன ஆயுத நிபுணர்கள், தங்கள் அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனிடம் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 21-ல் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக ஐ.நா. ரசாயன ஆயுத நிபுணர்கள், அங்கு கடந்த 10 நாள்களாக ஆய்வு நடத்தினர். அந்தக் குழுவினர் தங்கள் அறிக்கையை, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி- மூனிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்தனர்.
அந்த அறிக்கை குறித்து, ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் பான் கி- மூன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
சிரியா தாக்குதலில் எந்த வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பவை மட்டுமே அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு யார் காரணம், அப்பாவி பொதுமக்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்பன போன்ற சர்ச்சைக்குரிய விவரங்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.