Last Updated : 11 Jun, 2017 12:07 PM

 

Published : 11 Jun 2017 12:07 PM
Last Updated : 11 Jun 2017 12:07 PM

தேர்தல் நிதி முறைகேடு வழக்கில் பிரேசில் அதிபர் விடுதலை

தேர்தல் நிதி முறைகேடு வழக்கில் இருந்து பிரேசில் அதிபர் டேமரை அந்நாட்டு தேர்தல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதையடுத்து அவரது பதவி தப்பியது.

கடந்த 2014-ல் நடந்த அதிபர் தேர்தலுக்கு நிதி திரட்டியதில் டேமர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. எனவே, அவரது பதவியை பறிக்கக் கோரி அந்நாட்டின் தேர்தல் தீர்ப்பாய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை முடி வடைந்த நிலையில், 7 நீதிபதி களும் ஒருவர் பின், ஒருவராக தீர்ப்பை வாசித்து டேமரை பதவியில் இருந்து நீக்குவதா? வேண்டாமா? என வாக்களித்தனர். அதில் 3 வாக்குகள் டேமருக்கு எதிராகவும், 3 வாக்குகள் அவருக்கு ஆதரவாகவும் அமைந்த நிலையில், முடிவை தீர்மானிக்கும் முக்கிய வாக்கை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கில்மர் மென்டஸ் பதிவு செய்தார். அவர் டேமருக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு பேசுகையில், ‘‘ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அதிபரை மாற்றிக் கொண்டிருக்க முடியாது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டாலும், பதவியில் இருந்து நீக்குவதற்கு போதுமான வகையில் அவை இல்லை. எனவே அவர் அதிபர் பதவியில் தொடரலாம்’’ என்றார்.

இதனால் மைக்கேல் டேமரின் பதவி தப்பியது. அதே சமயம் நீதிக்கு கட்டுப்படாதது தொடர் பான மற்றொரு வழக்கும் அவருக்கு எதிராக தொடரப் பட்டுள்ளது. இவ்வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மீண்டும் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என கூறப்படுகிறது. எனினும் டேமரின் பதவிக்கு இருந்த ஆபத்து 60 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைந்துவிட்டதாக பிரேசிலின் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x