தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு எதிர்ப்பாளர்கள்

தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு எதிர்ப்பாளர்கள்
Updated on
1 min read

தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரவின் தாற்காலிக அலுவலகத்தை அரசு எதிர்ப்பாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். பிரதமர் யிங்லக்கும் அமைச்சரவையினரும் வடக்கு பாங்காக்கில் உள்ள பாதுகாப்பு செயலர் அலுவலகத்தையே தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர். டிசம்பரில் அரசு வளாகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் மூடிவிட்டதால் இந்த தாற்காலிக ஏற்பாடு அமலில் உள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாரை ஏவி அடக்கியபோது 5 பேர் கொல்லப்பட்டதையும் 70 பேர் காயம் அடைந்ததையும் கண்டித்து எதிர்ப்பு போராட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர் சுதேப் தவூக்சுபன் தன்னை பின் தொடர்ந்து 200 கார்களுடன் பிரதமரின் தாற்காலிக அலுவலகத்தை முற்றுகையிட்டார். பிரதமர் யிங்லக் எங்கு சென்றாலும் அவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பின் தொடர்வார்கள் என்று சுதேப் தலைமையிலான மக்கள் ஜனநாயக சீர்திருத்தக் குழு தெரிவித்துள்ளது.

அரசு எதிர்ப்பாளர்களை விரட்டி அடிக்க நகர் முழுவதிலும் ஆயிரக்கணக்கான போலீஸாரை இடைக்கால அரசு குவித்துள்ள நிலையில் சுதேப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ள அரசு கட்டிடங்களை மீட்க நூற்றுக்கணக்கான போலீஸார் செவ்வாய்க்கிழமை நடவடிக்கையில் இறங்கியபோது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு போலீஸ்காரர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யிங்லக் தலைமையிலான அரசை கவிழ்க்க நவம்பரிலிருந்தே போராட்டம் நடந்து வருகிறது. ஊழல் மலிந்துவிட்டதால் அதை கட்டுக்குள் கொண்டு வர தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் மன்றம் அமைத்து அதனிடம் அதிகாரத்தை அரசு ஒப்படைக்கவேண்டும் என அரசு எதிர்ப்பாளர்கள் கோரி வருகின்றனர்.

இதனிடையே அரிசி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருப்பதாக கூறி யிங்லக் மீது புகார் சுமத்தி அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கப்போவதாக தேசிய ஊழல்ஒழிப்பு கமிஷன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது யிங்லக்குக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in