

மோசமான வானிலை காரணமாக மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்திய பெருங்கடலில் மலேசிய விமானம் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பவ பகுதியில் ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா உள்ளிட்ட பன்னாட்டு போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
அந்த கடல் பகுதியில் புயல் மையம் கொண்டிருப்பதால் கடந்த செவ்வாய்க்கிழமை தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. புதன்கிழமை வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து தேடுதல் பணி தொடங்கியது.
போர்க்கப்பல்கள் தேடுகின்றன
இந்நிலையில் வியாழக்கிழமை வானிலை மீண்டும் மோசமடைந்தது. இதனால் விமானங்களின் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும் போர்க் கப்பல்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டன. ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் சக்சஸ் என்ற போர்க் கப்பல் சம்பவ பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேடி வருகிறது.
அந்த கப்பலின் கேப்டன் அலிசன் நாரிஸ் கூறியபோது, மேகமூட்டமாக இருப்பதால் எதையும் தெளிவாக பார்க்க முடியவில்லை. இடி, மின்னல், பலத்த காற்றால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடும் குளிர் நிலவுவதால் வீரர்களின் உடல்நிலையைப் பேண முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகிறோம் என்றார்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு மோசமான வானிலை நீடிக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே வெள்ளிக்கிழமை முதல் விமானங்களின் தேடும் பணி தொடரும் என்று ஆஸ்திரேலிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடலில் மிதக்கும் 300 மர்மப் பொருள்கள்
சம்பவ கடல் பகுதியில் விமானப் பாகங்கள் என்று கருதப்படும் பொருள்கள் மிதப்பதாக ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட் டுள்ளன. அந்த வரிசையில் தாய்லாந்து அரசு நேற்று வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் 300 பொருள்கள் மிதப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுவரை விமானத்தின் எந்தப் பாகமும் மீட்கப்படாத நிலையில் எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று தேடுதல் பணிக்கு தலைமை வகித்துள்ள ஆஸ்திரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
சோகத்தில் மூழ்கிய மலேசியத் தமிழர் குடும்பம்
மலேசிய விமானத்தில் பயணம் செய்த 227 பயணிகளும் 12 ஊழியர்களும் உயிரிழந்துவிட்ட தாக அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் கடந்த திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அதை உறுதிப்படுத்த இதுவரை ஆதாரங்கள் கிடைக்க வில்லை. எனவே பயணிகளின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை நடத்துவதில் குழப்பமடைந்துள்ளனர்.
மலேசியத் தமிழரான புஷ்பநாதனும் (34) கடலில் விழுந்ததாகக் கருதப்படும் விமானத்தில் பயணம் செய்தார். அவரது தந்தை ஜி.சுப்பிரமணியம் கூறியதாவது: எனது மகனின் உடல் கிடைக்கவில்லை. இந்து மத சம்பிரதாயப்படி அவனுக்கு இறுதிச் சடங்கை நடத்துவதா, வேண்டாமா என்று குழப்பமாக உள்ளது. அவன் திரும்பி வந்துவிடமாட்டானா என ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் என்றார்.
புஷ்பநாதன் வீட்டுக்கு ஒரே மகன் என்பதால் சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.